செய்திகள்

விடுதலைச் சுடர் ஏந்தும் தொடர் போராட்டம் லண்டனில் ஆரம்பம்

இலங்கையில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட அதேவளை, பிரித்தானியாவில் அத்தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து தமிழ் மக்கள் தொடர் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார்கள். இதன்போது, இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவழிப்புக்கு நீதி கோரி சுடர் ஏந்தும் போராட்டம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டது. இதேசமயம் , இலங்கையின் சுதந்திர தின கொண்டாட்டங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர் . சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டமையை ஆட்சேபித்து இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் சிலர் அவர்களது புகைப்படங்களை எரித்து தமது கோபத்தை வெளிப்படுத்தினர்.

இம்மாதம் 14ஆம் நாள் வரை பிரித்தானியாவின் பல பகுதிகள் ஊடாக இவ்விடுதலைச் சுடர் ஏந்திச் செல்லப்பட்டு பின்னர், பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாண்ட், ஜேர்மனி போன்ற நாடுகளுக்கூடாக மார்ச் திங்கள் 16 ஆம் நாள் ஜெனீவாவை சென்றடையும். ஐ நாசபையின் 28 வது மனிதவுரிமைக் கூட்டத்தொடர் நடைபெறும் காலத்தில், கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக சிறிலங்கா அரசாங்கத்தினால் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்ற தமிழின அழிப்புக்கு நீதி கேட்டும் இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளை பாரம்பரிய நிலமாகக் கொண்ட தமிழ் மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றை ஐக்கிய நாடுகள் அவை (அனைத்துலகம்) அங்கீகரிக்கவேண்டும் என்னும் கோரிக்கை உட்பட, பல கோரிக்கைகளை முன்வைத்தும் இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

பிரித்தானியாவில் விடுதலைச் சுடர் ஏந்தி தொடர் போராட்டம் நடைபெறவுள்ள பகுதிகள் மற்றும் கால நேர விபரங்கள் வருமாறு

வடமேற்கு லண்டன் 05.02.15 – 07.02.15
வடகிழக்கு லண்டன் 08.02.15 – 09.02.15
தென்கிழக்கு லண்டன் 10.02.15 – 11.02.15
தென்மேற்கு லண்டன் 12.02.15 – 14.02.15

லண்டன் புறநகர் பகுதி வரை சென்று பின்னர் பிரான்ஸ் நாட்டு செயற்பாட்டளர்களிடம் விடுதலைச் சுடர் கையளிக்கப்படும்.

மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் காலை 10 மணி தொடக்கம் மதியம் 12.30 வரையும் பிற்பகல் 2.30 தொடக்கம் 5 மணி வரையும் என்றவாறு விடுதலைச் சுடர் ஏந்திய பயணம் அமைய உள்ளது.

பிரித்தானியாவில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெறும் இக்கவனயீர்ப்புப் போராட்டமானது மேற்குறிப்பிட்ட பகுதிகளினூடாக மேற்கொள்ளப்படுகின்றபோது அவ்வப்பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செயலகங்கள் மற்றும் மாநகரசபை செயலகங்களில் மனுக்கள் கையளிக்கப்பட உள்ளன. இந்தப் போரட்டத்தில் அனைத்து மக்களையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.