செய்திகள்

விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்படவில்லை: அச்சுறுத்தல் தொடர்கிறது என்கிறார் கோதாபாய

“விடுதலைப் புலிகள் அமைப்பு முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது, அச்சுறுத்தல் நீங்கிவிட்டது என்று யாராவது நினைத்தால் அது தவறு. தப்பிச் சென்ற விடுதலைப் புலிகள் வெளிநாடுகளில் இன்னும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்’” என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ராணுவத்தினர் அதிக எண்ணிக்கையில் குவிக்கப் பட்டுள்ளனர். அங்கிருக்கும் ராணுவப் படைகளை குறைக்க வேண்டும் என்று இலங்கை எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜனாதிபதி  தேர்தலில் மீண்டும் போட்டியிடும் தனது சகோதரர் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறார். அப்போது அவர் பேசியதாவது:

இலங்கையில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பு முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக யாரும் நினைக்க கூடாது. போரின் போது இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற விடுதலைப் புலிகள் பலரும் வெளிநாடுகளில் தீவிரமாகச் செயலாற்றிக் கொண்டிருக்கின்றனர். பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார். அதனால் புலிகள் அமைப்பு அழிந்து விட்டது. அபாயம் நீங்கி விட்டது என்று யாரும் நினைத்தால் அது உண்மையில்லை.

விடுதலைப் புலிகள் அமைப்பை பலப்படுத்த, வெளிநாடுகளில் உள்ள அந்த அமைப்பினர் தீவிர பிரச்சாரத்தில் உள்ளனர். இலங்கையில் கடந்த 80களில் இருந்தது போன்ற இருண்ட காலத்தை மீண்டும் கொண்டு வர திட்டமிட்டு அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்தச் சூழ்நிலையில்தான் தேசத்தின் பாதுகாப்பை நாங்கள் கஷ்டப்பட்டு உறுதி செய்து கொண்டிருக்கிறோம். இந்தச் சூழ்நிலையில், வடக்குப் பகுதிகளில் ராணுவ வீரர்களை குறைக்க சொல்வது தவறானது”  இன அவர் கூறினார்.