செய்திகள்

விடுவிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள கிணறுகளிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு

வலிகாமத்தில் மீள்குடியமர்வுக்கான அனுமதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களிலிருந்து தொடர்ச்சியாக குண்டுகள், வெடிபொருட்கள் கிணற்குள் இருந்து மீட்கப்பட்டு வருகின்றன.

எனவே விடுவிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள கிணறுகளை மீளச்சோதனை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மீள் குடியமர்வு தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விடுவிக்கப்பட்ட வலி.கிழக்கு, வலி.வடக்கு பிரதேச செயலார் பிரிவுகளில் தொடர்ச்சியாக குண்டுகள், வெடிபொருட்கள் என்பன மீட்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான குண்டுகள் கிணற்றிலிருந்தே மீட்கப்படுகின்றன. இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இராணுவத்தினரின் கண்ணி வெடி அகற்றும் பிரிவு மற்றும் ஹலோ ட்ரஸ்ட் என்பன இந்தப் பகுதிகளில் ஏற்கனவே சோதனை செய்துள்ளன. இருப்பினும் இவ்வாறு மீட்கப்படுவதனால் அந்தப் பகுதிகளிலிலுள்ள கிணறுகளை மீளவும் சோதனை செய்வதற்கு அவர்கள் இணங்கியுள்ளனர்.

இராணுவத்தினரின் கண்ணிவெடி அகற்றும் பிரிவினரைப் பயன்படுத்தி விரைவில் கிணறுகளில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று அரச அதிபர் கூறியுள்ளார்.