செய்திகள்

வித்தியாவின் கொலையை கண்டித்து பாடசாலைகளில் பதாதைகளை காட்சிப்படுத்துங்கள் : ஆசிரியர் சங்கம் அதிபர்களுக்கு கோரிக்கை

புங்குடுதீவு வித்தியாவின் கொலையை கண்டித்து பாடசாலைகளுக்கு முன்னால் பதாதைகளை காட்சிப்படுத்துமாறும் மற்றும் மாணவியை நினைவு கூர்ந்து நாளை 27ம் திகதி   காலைக் கூட்டத்தின் போது மௌன அஞ்சலி செலுத்துமாறும்  இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் சகல பாடசாலைகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளது.
நேற்றுகொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடுசெய்திருந்த இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அதன்போது குறித்த கோரிக்கையை விடுத்தது. அந்த ஊடக சந்திப்பில் உரையாற்றிய அந்த சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்ததாவது,
யாழ்பாணம் புங்குடுதீவு பகுதியில்  மாணவியொருவர்  துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கபட்டு கொடுரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த காலங்களில் இது போன்று பல மாணவிகளும் மற்றும் சிறுவர்களும் கொல்லப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் அண்மையில் யாழ்பாணத்தில் இடம்பெற்ற சம்பவம் அதற்கும் மேற்பட்ட ஒன்றாக காணப்படுகின்றது. இந்த சம்பவம் நாடு எந்த நிலைமையில் இருக்கின்றது என்பதனையே எடுத்துக்காட்டுகின்றது. ஆசிரியர்கள் என்ற ரீதியல் இந்த சம்பவத்தை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
இதேவேளை  27ம் திகதி காலை பாடசாலைகளில் காலைக் கூட்டத்தின் போது அந்த மாணவியை நினைவு கூர்ந்து ஒரு நிமிட மௌன அஞ்சலியை ஏற்பாடு செய்யுமாறு சகல பாசாலை அதிபர்களிடமும் கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் அன்றைய தினம் பாடசாலைகளுக்கு முன்னால் மாணிவியின் கொலையை கண்டித்து பாதாதைகளை காட்சிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  என தெரிவித்துள்ளார்.