செய்திகள்

வித்தியா கொலைக் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சி: துவாரகேஸ்வரன் குற்றச்சாட்டு

புங்குடுதீவு மாணவி வித்தியாவைக் கொடூரமாகப் படுகொலை செய்த சம்பவம் தமிழ்மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கின்ற நிலையில் அந்த வெறிச் செயலைச் செய்த குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்குச் சிலர் முயன்று வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் தி.துவாரகேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.

குற்றவாளிகளைக் காப்பாற்ற எடுக்கப்படும் நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிடுமாறு கோரியுள்ள அவர் இது குறித்துத் தான் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் கவனத்திற்குக் கொண்டு வரப் போவதாகவும் கூறியுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே துவாரகேஸ்வரன் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழ்மக்களுக்கு எதிராகப் பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அதற்கெதிராகத் தமிழ்மக்கள் ஐக்கிய நாடுகள் சபையிடம் நீதி வேண்டி நிற்கின்ற நிலையில் அண்மையில் புங்குடுதீவில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவமானது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது. புங்குடுதீவில் மாணவி வித்தியாவுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைக் கண்டித்தும், அதற்கு நீதி கோரியும் பல போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

இந்த நிலையில் அந்தக் குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளறிகளைக் காப்பாற்றுவதற்குச் சிலர் முயன்று வருகின்றமை கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செயல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அத்துடன் தமிழர்களின் வரலாற்றில் இனிமேல் இவ்வாறானதொரு கொடூரச் சம்பவம் இடம்பெறக் கூடாது இவ்வாறு இடம்பெற நாம் அனுமதிக்கவும்  மாட்டோம் என்றும் கூறினார்.