செய்திகள்

வித்தியா விவகாரத்தை பயன்படுத்தி அரசியல் செய்ய முயற்சிக்க வேண்டாம்: சி.வை.பி.ராம்

பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட அப்பாவி பாடசாலை மாணவி சிலலோகநாதன் வித்தியாவைப் பயன்படுத்தி அரசியல் செய்ய முயற்சிக்க வேண்டாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் சி.வை.பி.ராம் வேண்டுகோள் விடுத்தள்ளார்.

அம்மாணவியின் கொலையுடன் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளுக்கும் உரிய தண்டனை வழங்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படும் என்பதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியாகவுள்ளார் எனக் குறிப்பிட்டவர் ஈடு செய்யமுடியாத இழப்பை சந்தித்துள்ள அவரது குடும்பத்தாருக்கு வாழ்வாதர உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வித்தியாவின் கொலை தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் சூழல் சி.வை.பி.ராம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ப+ங்குடுதீவில் வன்புணர்வுக்குப் பின்னர்  சிவலோகநாதன் வித்தியாகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த விடயம் முழு இலங்கைத் தீவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன் எம்சமூகத்தின் நெஞ்சத்தை வெகுவாக தாக்கியுள்ளது. பல்வேறு கனவுகளுடன் இருந்த வித்தியாவின் பெற்றோர் அவரது உறவினர்கள் சொல்லெண்ணா துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். அவர்களின் இழப்பை எதனாலும் ஈடுசெய்ய முடியாது. எனினும் அப்பாவி மாணவி வித்தியாவை இழந்து பரிதவிக்கும் குடும்பத்தாருக்கு வாழ்வாதர உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

குறித்த மாணவி விவகாரம் தொடர்பான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடிய போது இக்கொடூரத்தை புரிந்த குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தினேன். அத்துடன் அவரது குடும்பத்தாருக்கு உதவிகள் வழங்கப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தேன்.  அதனடிப்படையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் பக்கச்சார்பற்ற விசாரணையின் மூலம் கண்டறியப்பட்டு அதியுச்ச தண்டனை வழங்கப்படும். இந்த விடயத்தில் நீதி நிலைநாட்டப்படும் என உறுதியளித்துள்ளார். மேலும் உதவிகள் வழங்குவதற்குரிய நடவடிக்கைள் எடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அவ்வாறான நிலையில் இந்த அப்பாவி மாணவிக்கு நிகழ்ந்த அவலத்தை பயன்படுத்தி சிலர் அரசியல் செய்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறான அடிமட்ட செயற்பாடுகளில்  மக்கள் பிரதிநிதிகள் ஈடுபடுவது அநாகரிகமான செயற்பாடாகும். ஆகவே அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அரசியல்வாதிகள் முற்படக்கூடாது. ஈடு செய்யமுடியாத இழப்பைச் சந்தித்துள்ள வித்தியாவின் குடும்பத்தாருக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்காகவும், அவர்களின் எதிர்காலத்திற்காகவும் அனைவரும் பாடுபடவேண்டும். அதுவே அப்பாவி சிறுமியின் ஆத்மசாந்திக்கு  நாம் அனைவரும் செய்யும் பிரதியுபகாரமாகும்.

மேலும் 30வருட யுத்தத்தால் அசாதாரண நிலைமைகளை எதிர்கொண்ட வடக்கு கிழக்கு வாழ் மக்கள் எழுச்சியான போராட்டங்களை முன்னெடுப்பதில் தவறில்லை. எனினும் சட்டத்தையும் ஒழுங்கையும் மீறி எல்லை தாண்டுவது பொருத்தமானதொன்றல்ல. இத்தருணத்தில் அமைதிகாத்து மீண்டும் வடகிழக்கில் அச்சசூழல் ஏற்படுவதற்கு அடித்தளமிடாத வகையில் தமது ஜனநாயக போராட்டங்களை நீதித்துறைக்கு கட்டுப்பட்டு முன்னெடுப்பது சாலச்சிறந்ததாகும். அதனை விடுத்து சட்டத்தை கையில் எடுப்பதால் எந்தவிதமான முடிவுகளும் கிடைத்துவிடப்போவதில்லை  என்றுள்ளது.