செய்திகள்

வித்யா கொலையுடன் தொடர்புபடுத்தி கூட்டமைப்பை ஓரம்கட்ட முயற்சி : அரியநேத்திரன் குற்றச்சாட்டு

மாணவி வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புபடுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பினை மக்கள் மத்தியில் இருந்து ஓரங்கட்டும் பணிகளை சிலர் மேற்கொண்டுவருவதாக மட்டமக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

மாணவியின் கொலையுடன் தொடர்புபட்ட எந்தக்குற்றவாளியையும் காப்பாற்றும் முயற்சிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்த எந்த உறுப்பினரும் துணைபோகமாட்டார்கள் என்று தெரிவித்துள்ள அவர்,மாணவிக்கு சார்பாக ஆஜராகும் பணியை தமிழ் தேசிய கூட்டமைப்பு சட்டத்தரணிகள் மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேசத்துக்குட்பட்ட துறைநீலாவணையில் கிழக்கிலங்கையின் சிற்றரசியாக இருந்த சீர்பாததேவிக்கு அமைக்கப்பட்ட சிலையை திறந்துவைக்கும் நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது.

துறைநீலாவணை இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனின் சொந்த நிதியொதுக்கீட்டில் நிறுவப்பட்டுள்ள இந்த சிலையை திறந்துவைக்கும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எஸ்.கலையரசன் மற்றும் முன்னாள் கல்முனை நகரசபை உறுப்பினர் ஜெயக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

உலகெங்கும் வாழும் சீர்பாத குலத்தினை தோற்றுவித்தவராக சீர்பாததேவி அரசு இருந்துவருவதுடன் நூறு வீதம் சீர்பாததேவியின் வழித்தோன்றல்கள் வாழும் பிரதேசமாக துறைநீலாவணை இருந்துவருகின்றது.

இந்த சிலை திறப்பு விழாவில் பெருமளவான பொதுமக்கள்,தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,

பெண்களுக்கு முக்கியத்தும் அளித்த ஒரு இனமாக தமிழினமே இருந்துவருகின்றது.பெண்கள் தங்களது வீரத்தினை வெளிப்படுத்தும் இனமாகவும் தமிழினம் இருந்துவருகின்றது.

யாழ்ப்பாணத்தில் கூட அங்குள்ளவர்கள் அகிம்சை ரீதியாகவே போராட்டத்தில் ஈடுபட்டார்களே தவிர ஆயுதம் ஏந்தி எதிரியைத் தாக்கவில்லை மாறாக மட்டக்களப்பு துறைநீலாவணையிலே கிராமத்திலே அந்நிய சக்தியை விரட்டிய பெருமை இந்த மண்ணுக்கே உரியது.

இந்தக்கிராமத்து மக்கள் வீரம் பொருந்தியவர்கள் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு எல்லைக்கிராமங்களில் அதிகளவான இடங்களில் இந்த ஊரைச்சேர்ந்தவர்களே தமிழர்களுக்கான இருப்பிடங்களை இன்றும் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றார்கள் இவர்களது பிரசன்னம் அங்கு இல்லாமல் இருந்திருந்தால் இன்று சிங்களவர்களது பிரசன்னம் அதிகமாக இருந்திருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் பெண்களின் பங்கு அளப்பெரியது அன்று. காலிமுகத்திடலாக இருக்கலாம் அல்லது கொழும்பாக இருக்கலாம் ஏன் மட்டக்களப்பு கச்சேரியாக இருக்கலாம் அனைத்து இடங்களிலும் எமது தமிழ்த் தேசியத்தலைவர்களுடன் பெண்களும் அகிம்சைப் போராட்டங்களிலே பங்கெடுத்தார்கள்.

அதன் பின்னர் உருவாக்கப்பட்ட ஆயுதபோராட்டத்தில் பெண்களின் தியாகங்கள், அவர்கள் இந்த மண்ணுக்காக செய்த சேவைகள் அனைத்துப் பெண்களின் போராட்டம் மூலம் பலம் பொருந்திய சக்தியாக வெளிப்படுத்தப்பட்டது.

முதன் முதலாக இந்த நாட்டில் ஏற்பட்ட போராட்டத்தில் இந்தியப்படைக்கு எதிராக போராடிய பெண்ணாக மன்னாரைச் சேர்ந்த மாலதி என்னும் பெண்ணுக்கே உரித்துடையது அதன் பின்னர்தான் அம்பாறை மாவட்டத்திலும் பெண்களின் போராட்டங்கள் வலுப்பெற்று உக்கிரமடைந்தது.

இந்த நாட்டில் நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளிலும் பெண்களே பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் அது மட்டக்களப்பாக, யாழ்ப்பானமாக, முல்லைத்தீவிலே இறுதியாக படையினரால் மிகுந்த பாலியல் வல்லுரவிற்கு ஆளாக்கப்பட்ட இசைப்பிரியாவாக இருக்கலாம் இவர்கள் அனைவரும் துன்பநிலையை அடைந்தே மாண்டார்கள் என்பது வரலாறு எனவும் கூறினார்.

 IMG_0019 IMG_0023 IMG_0043 IMG_0055 IMG_0072 IMG_0074 IMG_0075