செய்திகள்

வித்யா கொலையை கண்டித்து கோப்பாய் மகாவித்தியாலய மாணவர்கள் நடத்திய பேரணி

புங்குடுதீவு மகாவித்தியாலய மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும் குற்றவாளிகளுக்கு மரண தண்டணை வழங்குமாறு வலியுறுத்தியும் யாழ்.கோப்பாய் மகாவித்தியாலய மாணவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை(19.5.2015) சுமார் 45 நிமிடங்கள் சுலோகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று காலை 08.30 மணிக்கு பாடசாலையின் முன் ஒன்று கூடிய மாணவர்களும் ஆசிரியர்களும் கறுப்புப் பட்டி அணிந்து கறுப்புக் கொடிகள்,சுலோகங்கள் ஏந்தியவாறு இருபாலைச் சந்தி வரை பேரணியாகச் சென்றனர்.இதன்பின்னர் இருபாலைச் சந்தியில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ‘பள்ளிச் சீருடை சிதைந்தது ஏன்?’ ‘பள்ளி சென்ற மாணவிக்கு ஏனிந்த அவலம்’;,’சகோதரிக்கு ஏற்பட்ட நிலை இனி யாருக்கும் ஏற்படக் கூடாது.’ ‘காமுகர்களின் அராஜகத்தை வேரோடு அழிப்போம்’,’நீதி தேவதையே உறங்கி விடாதே’,’மனிதாபிமானம் மரணித்துப் போனதா?’ ‘பாலியல் வன்முறைகளை வேரோடு ஒழிப்போம’;காமுகர்கட்கு மரண தண்டணை வழங்கு’,’பள்ளிச் சிறார்களின் பாதுகாப்பிற்கு யார் உத்தரவாதம்;?’,’நீதிக்காகக் குரல் கொடுப்போம்’ போன்ற கோஷங்களை எழுப்பியதுடன் சுலோகங்களையும் தாங்கியிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தரம்-11 இல் கல்வி கற்கும் சி.மயூரன் என்பவர் கருத்துத் தெரிவிக்கையில்,புங்குடுதீவில் வித்தியா அக்கா கோரமாகப் படுகொலை செய்யப்பட்டமை ஒரு அநியாயமான செயல்.எங்களுக்கும் சகோதரிகளிருக்கிறார்கள்.நாங்கள் எங்களோடு கல்வி கற்கும் பெண்களை சகோதரியாகக் கருதித் தான் பழக வேண்டும்.குற்றமிழைத்தவர்களுக்குப் பாரபட்சமின்றிக் கடுமையான தண்டணை வழங்கப்பட வேண்டும் என்றார்.

இதன் போது கருத்துத் தெரிவித்த பாடசாலையின் அதிபர் எஸ்.ஞானப்பிரகாசம்,புங்குடுதீவில் பள்ளி மாணவி வித்தியா பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுக் கோரமாகக் கொல்லப்பட்ட செய்தியை எம்மால் சகித்துக் கொள்ள முடியாதுள்ளது.இந்தக் கொடூரமான செயல் புரிந்தவர்கள் இனங் காணப்பட்டு அவர்களுக்கு உச்சபட்சத் தண்டணை வழங்கப்பட வேண்டும் இவ்வாறான சம்பவங்களில் எதிர்வரும் காலங்களில் இந்த மண்ணிலே எந்த வேளையிலும் இடம்பெறக் கூடாது.இதற்காகத் தான் எல்லோருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்றைய போராட்டத்தை ஏற்பாடு செய்து நடாத்தி முடித்திருக்கிறோம்.முதலமைச்சர்,அரசாங்க அதிபர்,பிரதேச செயலகங்கள்,பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றின் காத்திரமான செயற்பாடுகளினூடாக எதிர்வரும் காலங்களில் இவ்வாறான குற்றச் செயல்கள் இடம்பெறது தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன் என்றார்.
யாழ்.நகர் நிருபர்-

Kopai (2) Kopai (3) Kopai (4) Kopai (5) Kopai (6) Kopai (7) Kopai (8) Kopai (9) Kopai (10)