வித்யா கொலை வழக்கு: சம்பவத்தை நேரில் பார்த்தவரிடம் வாக்குமூலம் பதிவு
புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான மரபணு அறிக்கைகளை ஆய்வு செய்யும் ஜின்ரெக் இரசாயன பகுப்பாய்வு நிறுவனத்தின் அதிகாரியை அடுத்த வழக்குத் தவணையின்போது மன்றில் ஆஜராக வேண்டுமென்றும் அத்துடன் இக்கொலை தொடர்பான விசாரணை அறிக்கைகளை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் பூரணப்படுத்த வேண்டும் என்றும் ஊர்காவற்றுறை நீதிவான் வை.எம்.றியால் உத்தரவிட்டுள்ளார்.
மாணவியின் படுகொலை தொடர்பில் நேரில் பார்த்த சாட்சியம் உட்பட மேலும் ஒருவருமாக 11ஆவது, 12ஆவது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலை யில் இவர்கள் தொடர்பான வழக்கு விசாரணை நேற்றைய தினம் ஊர்காவற்றுறை நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே அவர் இவ் உத்தரவைப் பிறப்பித்தார்.
மேலும் நேற்றைய வழக்கு விசாரணையின்போது, மாணவியின் படுகொலையை நேரில் பார்த்த சந்தேக நபரான தருமலிங்கம் ரவீந்திரனிடம் வாக்கு மூலத்தை பதிவு செய்யும் வகையில் நீதிவான் அவரிடம் 2ஆம், 3ஆம் சந்தேக நபர்கள் உங்களை குறித்த மாணவி பாடசாலை செல்கிறாரா என பார்க்கச் சொன்னார்களா? என வினவினார். இதற்கு குறித்த சந்தேக நபர் இல்லை என பதிலளித்திருந்தார்.
இதனையடுத்து இவர்கள் தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு நீதிவான் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டார். அத்துடன் குற்றப்புலனாய்வு பிரிவிடம் மரபணு அறிக்கைகள் இன்னமும் மன்றில் சமர்ப்பிக்கப்படாமை குறித்து நீதிவான் வினவியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த குற்றப்புலனாய்வு பிரிவு சார்பாக மன்றில் ஆஜராகி இருந்த அதிகாரி, குறித்த கொலை தொடர்பாக சேகரிக்கப்பட்ட மரபணுக்கள் ஆய்வுக்காக ஜின்ரெக் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் இன்னமும் அது குறித்த அறிக்கையை தமக்கு வழங்கவில்லையெனவும் தெரிவித்தார்.
இதனையடுத்து குறித்த ஜின்ரெக் நிறுவனத்தின் வித்தியாவின் மரபணு அறிக்கைகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரியை அடுத்த வழக்கு தவணையின்போது மன்றில் முன்னிலையாக வேண்டுமெனத் தெரிவித்ததுடன் அவ்வாறில்லாத பட்சத்தில் அது தொடர்பான கட்டளையை நீதிமன்றம் பிறப்பிக்கும் எனவும் நீதிவான் தெரிவித்தார்.
மேலும் இக்கொலை தொடர் பாகமேற்கொள்ளப்படவேண்டிய சகல விசாரணை அறிக்கைகளையும் பூரணமாக மேற்கொண்டு மன்றில் அறிக்கை சமர்ப் பிக்கவேண்டுமெனவும் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு நீதிவான் உத்தரவிட்டதுடன் இவ்வழக்கு விசாரணையை எதிர்வரும் 4ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன் இருவரது விளக்கமறியலையும் நீடித்திருந்தார்.
R-06