செய்திகள்

விநியோகஸ்தர் நம்பிக்கை மோசடி செய்துவிட்டார்: நடிகை வனிதா புகார்

என் படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடாமல், ரூ.30 லட்சத்தை மோசடி செய்துவிட்டார். விநியோகஸ்தர் மீது நடிகை வனிதா விஜயகுமார் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

நடிகர் விஜயகுமார்-மஞ்சுளாவின் மூத்த மகள் நடிகை வனிதா. இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதில், ”என்னுடைய வனிதா பிலிம் புரோடக்‌ஷன் நிறுவனத்தின் பெயரில், ‘எம்.ஜி.ஆர். சிவாஜி, ரஜினி, கமல் ரசிகர்கள் நற்பணி மன்றம்’ என்ற தலைப்பில் ஒரு படத்தை ரூ.2 கோடி செலவில் தயாரித்தேன். அந்த திரைப்படத்தை பிரபல நடன இயக்குனர் ராபட் இயக்கினார். இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து, வெளியிட திட்டமிட்டேன். இந்த படத்தை விளம்பரப்படுத்த எனக்கு ரூ.51 லட்சம் பணம் தேவைப்பட்டது.

இந்நிலையில், வைபிரண்ட் மூவி என்ற நிறுவனத்தின் உரிமையாளர் வெங்கடேஷ் ராஜா என்னை தொடர்பு கொண்டு, விளம்பர பட்ஜெட் தொகையான ரூ.51 லட்சத்தில் ரூ.21 லட்சத்தை தான் செலவு செய்து, படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட தயாராக இருப்பதாக கூறினார். இதையடுத்து, இருவரும் ஒப்பந்தம் செய்து கொண்டோம். விளம்பரம் மற்றும் தமிழகம் முழுவதும் படத்தை வெளியிட ரூ.30 லட்சத்தை வெங்கடேஷ் ராஜாவிடம் கொடுத்தேன். ரூ.10 லட்சத்தை காசோலை மூலமாகவும், ரூ.20 லட்சத்தை ரொக்கமாகவும் வழங்கினேன்.

பணத்தை பெற்றுக்கொண்ட அவர், ஒப்பந்தத்தின்படி செயல்படவில்லை. தமிழகம் முழுவதும் 80 தியேட்டர்களில் படத்தை வெளியிடுவதாக கூறிவிட்டு, 30க்கும் குறைவான தியேட்டர்களில் படத்தை வெளியிட்டுள்ளார். அதுவும், நாள் ஒன்றுக்கு ஒரு காட்சி என்ற ரீதியில் படத்தை வெளியிட்டுள்ளார். திருச்சி, கோவை போன்ற மாநகரங்களில் ஒரு தியேட்டரில் கூட என் படம் வெளியாகவில்லை. வெங்கடேஷ்ராஜா ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டதுடன், நம்பிக்கை மோசடி செய்துள்ளார். இவரால், எனக்கு பெரும் தொகை நஷ்டமாகி உள்ளது. எனவே, வெங்கடேஷ் ராஜா மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதில் கூறி இருக்கிறார்.