செய்திகள்

விபத்துக்குள்ளான காரில் இருந்து 1 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

பூட்டுத்தாக்கு அருகே உள்ள அரப்பாக்கம் கூட்ரோட்டில்  விபத்துக்குள்ளான காரில் இருந்து 1 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர மாநில வன பகுதியில் இருந்து வேலூர் வழியாக செம்மரங்கள் கடத்தப்படுவது தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இன்று காலை ஆந்திராவில் இருந்து பொன்னை வழியாக செம்மரங்கள் கடத்தி வந்த கார் ஒன்று
பூட்டுத்தாக்கு அருகே உள்ள அரப்பாக்கம் கூட்ரோட்டில் உள்ள வளைவில் திரும்ப முயன்றபோது வேகக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் இறங்கியது. இதனை கண்டு ஏதோ விபத்து நடந்து விட்டது என நினைத்து பதறிபோன அப்பகுதி பொதுமக்கள் காரை நோக்கி ஓடினர். பொதுமக்கள் வருவதை கண்டு  காரில் இருந்த இனம்தெரியாத  நபர்கள் காரில் இருந்து இறங்கி ஓடி தலைமறைவாகியுள்ளார்கள்.

காரில் செம்மரக்கட்டைகள் இருந்ததை கண்ட பொதுமக்கள் இதுகுறித்து ரத்தினகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காரில் இருந்த 18 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட செம்மரங்கள் வனதுறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதோடு தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.