செய்திகள்

விபரீதத்தில் முடிந்த செல்பி ஆசை: கொள்ளைக்காரன் என நினைத்து 15 வயது சிறுவனை சுட்டுக் கொன்ற பாகிஸ்தான் போலீஸ்

.பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பைசலாபாத் நகரில் பர்ஹான்(15), பஹத்(14), என்ற இரு சிறுவர்கள், தங்களது சமூக வலைதளங்களில் செல்பி புகைப்படம் பதிவேற்றம் செய்வதற்காக பொம்மை துப்பாக்கியை வைத்துக்கொண்டு ஒருவரை விரட்டி, சுடுவது போல் விளையாடியபடி செல்போனால் புகைப்படம் எடுத்து கொண்டிருந்தனர்.

இவர்கள் விளையாடிக் கொண்டிருப்பதை அவ்வழியாக ரோந்து சென்ற போலீசார் தூரத்தில் இருந்து பார்த்து விட்டனர். அதில் போலீஸ் ஒரு அதிகாரி, உண்மையான கொள்ளையன்தான் துப்பாக்கியை வைத்து கொள்ளையடிப்பதற்காக மிரட்டிக்கொண்டிருக்கிறான் என்று நினைத்து எந்த எச்சரிக்கையும் விடுக்காமல் சிறுவன் பர்ஹானை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.

இந்த சம்பவத்தில், இரு சிறுவர்களும் காயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயம் அடைந்த பர்ஹான் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

இந்த சம்பவம் தொடர்பாக, சிறுவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பர்ஹாத் சீமா என்ற அந்த போலீஸ் உயரதிகாரி மற்றும் நான்கு போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நீதிவிசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று பஞ்சாப் மாகாண சட்ட மந்திரி ரானா சனாவுல்லா இன்று தெரிவித்துள்ளார்.