செய்திகள்

விமல் வீரவன்சவின் மனைவி தலைமறைவு: ஏழு பொலிஸ் குழுக்கள் தேடுதல் வேட்டை

கடவுச்சீட்டு மோசடியில் சம்பந்தப்பட்டு பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தேடப்படும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சாஷினி வீரவன்ச தலைமறைவாகியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

வெவ்வேறான தகவல்களுடன் இரண்டு கடவுசீட்டுக்களைப் பெற்றுக்கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட சாஷினியைக் கைது செய்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் குழு கடுவெலையிலுள்ள அவரது இல்லத்துக்குச் சென்ற போது அவர் அங்கிருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து அவர் மறைந்திருக்கலாம் எனக் கருதப்படும் அவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்களின் வீடுகளிலும் பொலிஸார் சோதனைகளை நடத்தியுள்ளார்கள். எந்த இடத்திலும் சாஷினி இருக்கவில்லை என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை நுகேகொடையில் இடம்பெற்ற மகிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டத்தில் உரையாற்றிய விமல் வீரவன்ச, தன்னுடைய மனைவி மீது குற்றச்சாட்டைச் சுமத்தும் பொலிஸார் அவரைக் கைது செய்வதை தாமதப்படுத்துவது ஏன் எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

மனைவி தலைமறைவாகியிருப்பதைத் தெரிந்துகொண்டிருந்த நிலையிலேயே இவ்வாறான கேள்வியை விமல் வீரவன்ச எழுப்பியிருக்கலாம் என பொலிஸ் வட்டாரங்கள் தற்போது கருதுகின்றன.

சாஷினியைக் கைது செய்வதற்காக கொழும்பு, கம்பொல மற்றும் கண்டியில் ஏழு பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேடுதல் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.