செய்திகள்

விமானத்தாக்குதல்கள், உள்மோதல்களால் தடுமாறத்தொடங்கியுள்ள ஐஎஸ்

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மீதான விமானதாக்குதல்காரணமாக அந்த அமைப்பு தனது உட்கட்டமைப்பு வசதிகளை பேணுவதற்கு பலத்த சிரமங்களை எதிர்நோக்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திங்கட் கிழமை சிரியா துருக்கி; எல்லையில் குறிப்பிட்ட அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமொன்றின் மீது அமெரிக்கா தலைமையிலான நாடுகள் மேற்கொண்ட விமானதாக்குதல்களில், அந்த அமைப்பை சேர்ந்த 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சிரியாவில் மனித உரிமை நிலவரங்களை கண்காணித்து வரும் அமைப்பொன்று தெரிவித்துள்ளது.இந்த தாக்குதலின் போது தொழிலாளர்கள் சிலரும் கொல்லப்பட்டுள்ளனர்.இவ்வாறான தாக்குதல்கள் காரணமாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் எண்ணெய் வருமானத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.கடந்த நவம்பரில் அந்த அமைப்பிற்கு எண்ணெய் காரணமாக நாளொன்றிற்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக கிடைத்துள்ளது , எனினும் இந்த நிலை தற்போது மாற்றமடைந்துள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது.fighter_jet

இதேவேளை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் மீது ஞாயிற்றுக்கிழமை இனந்தெரியாத கெரில்லா குழுவொன்று மேற்கொண்ட தாக்குதலில் இந்த அமைப்பை சேர்ந்த 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் சிரியாவின் மனித உரிமைகளை கண்காணித்துவரும் அமைப்பு தெரிவித்துள்ளது.
கிழக்கு சிரியாவில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களே தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.குறிப்பிட்ட கெரில்லாக்கள் இன்னொரு பகுதியிலும் ஐஎஸ் அமைப்பின் மீது தாக்குதலை மேற்கொண்டு அதன் உறுப்பினர்கள் பலரை கொன்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஐஎஸ் அமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் இவ்வாறான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக வாசிங்டன்போஸ்ட் தெரிவித்துள்ளது. எனினும் இவ்வாறான தாக்குதல்களால் அந்த அமைப்பிற்கு உடனடி அபாயம் எதுவுமில்லை என குறிப்பிட்டுள்ள வாசிங்டன் போஸ்ட்,ஐஎஸ் அமைப்பிற்குள் காணப்படும் பல்வேறு குழுவினர் மத்தியிலான மோதல் காரணமாக அந்த அமைப்பு தனது பிடியை தொடாந்தும் வைத்திருப்பதற்கு சிரமப்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
வெளிநாடுகளை சேர்ந்த அமைப்பின் உறுப்பினர்கள் தப்பியோட முயல்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன,குறிப்பிட்ட பகுதிகளிலிருந்து வெளியே செல்வதற்கு கடும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளது, உளவாளிகள் மற்றும் தனது அமைப்பிலிருந்து வெளியேற முயன்ற 120 பேரை ஐஎஸ் அமைப்பு கடந்த வாரம் சுட்டுக்கொன்றுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.