செய்திகள்

விமானத்தின் சக்கரத்தில் மறைந்து 8 ஆயிரம் மைல் பயணம் செய்தவர் கிழே விழுந்து சாவு

விமானத்தின் சக்கரப்பகுதியில் மறைந்திருந்து 8 ஆயிரம் மைல் தொலைவு பயணம் செய்து இங்கிலாந்துக்கு வந்தவர் கிழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென் ஆப்பிரிக்கா தலைநகர் ஜோகன்னர்ஸ்பர்க்கில் இருந்து பிரிட்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு பிரிட்டன் ஏர்வேசுக்கு சொந்தமான போயிங்-747 ரக விமானம் கடந்த புதன்கிழமை மாலையில் புறப்பட்டு சென்றது. விமானம் சுமார் 11 மணி நேரத்திற்கு மேலாக பயணம் செய்து ஹீத்ரோவை சென்று அடைந்தது.

இந்நிலையில் பிரிட்டன் தலைநகர் லண்டனின் ரிஷ்மாண்ட் நகரில் உள்ள ஆடை தொழிற்சாலையின் மீது ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இவர் ஜோகன்னர்பர்க்கில் இருந்து ஹீத்ரோ சென்ற விமானத்தின், சக்கரப்பகுதியில் மறைந்திருந்து பயணம் செய்தபோது விழுந்து இறந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே விமானத்தில் இதுபோன்று விமானத்தின் சக்கரப்பகுதியில் பயணம் செய்த மற்றொரு நபர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். அவர் மீட்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக தீவிர விசாரணையும் நடைபெற்று வருவதாக பிரிட்டன் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

விமானம் ஜோகன்னர்ஸ்பார்க்கில் புறப்படுவதற்கு முன்னதாகவே இருவரும், சக்கரம் தங்களுக்கு இடையூறு ஏற்படுத்திவிடாத வண்ணம் அதன் உள்ளே சென்று இருந்துள்ளனர். விமானம் புறப்பட்டு சென்று லண்டன் அடையும் வரையிலும் இருவரும் பாதுகாப்பாக இருந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்து உள்ளது. மிகவும் மோசமான வானிலையிலும் சுமார் 8000 ஆயிரம் மைல் தூரம் இருவரும் விமானத்தின் சக்கரத்திற்கு உள்ளே உள்ள பகுதியில் இருந்து பயணம் செய்து உள்ளனர்.
விமானத்தில் இதுபோன்று ஆபத்தான முறையில் பயணம் செய்தவர் உயிர்பிழைத்து உள்ளது மிகவும் அரிதான சம்பவம் என்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்து உள்ளது