செய்திகள்

விமான நிலையத்தில் கைதான பகீரதி மீது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு

குடும்பத்தினரைப் பார்ப்பதற்காக இலங்கை வந்த பின்னர் பிரான்ஸ் திரும்பும் வழியில் கொழும்பு விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்ட முருகேசு பகீரதி என்ற பெண் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

பிரான்ஸிலிருந்து கடந்த மாதம் இலங்கை வந்திருந்த பகீரதியும் அவரது 8 வயது மகளும் கிளிநொச்சியில் உள்ள பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் விடுமுறையை கழித்துவிட்டு திரும்பும் வழியிலேயே திங்கட்கிழமை விமானநிலையத்தில் தடுக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பகீரதியை மூன்று நாள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரித்துவருவதாக காவல்துறை பேச்சாளர் எஸ்எஸ்பி அஜித் ரோஹண தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் அமைப்பில் மூன்று ஆண்டுகள் இருந்துள்ள பகீரதி 2005-ம் ஆண்டில் பிரான்ஸ் செல்ல முன்னர் பல்வேறு தாக்குதல் நடவடிக்கைகளில் பங்கெடுத்திருந்தாக காவல்துறை குற்றம் சாட்டுகின்றது.

‘உண்மையில் இந்தப் பெண் 1997-ம் ஆண்டிலிருந்து 2000-ம் ஆண்டுவரை கடற்புலிகளின் தலைவியாக இருந்துள்ளார். அவர் 2005-ம் ஆண்டில் இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளார். அவர் அவரது காலப்பகுதியில் இலங்கை கடற்படை மீது நடத்தப்பட்ட பல தாக்குதல்களுக்கு அவர் தலைமை தாங்கியுள்ளதாக தெரியவருகின்றது’ என்று அஜித் ரோஹண தெரிவித்தார்.

‘அவ்வாறே, தற்கொலை குண்டுதாரிப் பெண்களை தயார்படுத்தும் திட்டங்களிலும் அவர் பங்கெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. இவர் பற்றிய தகவல்கள் எங்களுக்கு கிடைத்தன. இந்த சந்தர்ப்பத்தில் அவர் இலங்கை வந்துள்ளதாகவும் தெரியவந்தது. அவர் இலங்கையிலிருந்து வெளியேறபோன சந்தர்ப்பத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்’ என்றும் கூறினார் காவல்துறை பேச்சாளர்.

‘இப்போது விடுதலைப் புலிகளின் பிரச்சனை இல்லை. ஆனால் இலங்கையில் கடந்த காலத்தில் யாராவது குண்டுத் தாக்குதல் அல்லது கொலைகளில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் மீது வழக்குத் தொடுப்பதற்கு 20 ஆண்டுகாலத்திற்கு எங்களுக்கு அதிகாரம் இருக்கின்றது’ என்றும் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பகீரதி மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சாட்சியங்கள் இருப்பதாகவும் அவற்றை எதிர்காலத்தில் வெளிப்படுத்துவதாகவும் கூறிய காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹண, விசாரணைகளின் முடிவில் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்திருக்கின்றார்.