விமான நிலைய கைதுகள் தொடர்கின்றன: உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலய விளையாட்டுப் போட்டியில் பொன் செல்வராசா
“இந்த நாட்டில் பயங்கரவாதத் தடைச்சட்டம் என்று நீக்கப்படுகின்றதோ அன்றுதான் தமிழ் மக்கள் உண்மையான சமாதானத்தை காணலாம். அல்லாதுவிட்டால் கைதுகள் இடம்பெற்றவண்ணமே இருக்கும்” என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.
கல்லடி,சிவானந்தா பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்ததாவது,
2009ஆம் ஆண்டுடன் எம்மை தாக்கிய கொடூர யுத்தம் முடிவடைந்துவிட்டாலும்கூட அதை தொடர்ந்துவந்த பயங்கரவாதம் எம்மை விட்டுவைக்கவில்லை. அதுவே அரச பயங்கரவாதமாகும். நாங்கள் அரச பயங்கரவாதத்தினால் பீடிக்கப்பட்டிருந்தோம். அது ஜனவரிமாதம் எட்டாம் திகதியுடன் செயலிழந்துவிட்டது.
இப்போது நாங்கள் ஓரளவு சந்தோஷமாகவும் சமாதானமாகவும் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். அந்த சமாதானம் உண்மையானதாக இன்னமும் மாறவில்லை. இப்பொழுதும்கூட கைதுகள் நடந்துகொண்டிருப்பதை நாங்கள் காண்கின்றோம். வெளிநாடுகளிலிருந்து இங்குவரும் எமது இளைஞர்கள் கைது செய்யப்படுகின்றார்கள். அவர்கள் சிலவேளை முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களாக இருந்திருக்கலாம். இந்த நாட்டில் இப்பொழுதும் பயங்கரவாதத் தடைச்சட்டம் இருக்கின்றது. அதன் காரணமாக கைது செய்யப்படுகின்றார்கள். இந்த நாட்டில் பயங்கரவாதத் தடைச்சட்டம் என்று நீக்கப்படுகின்றதோ அன்றுதான் உண்மையான சமாதானத்தை நாங்கள் காணலாம்.
பத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் பூசா முகாமிலும் மகசின் சிறைச்சாலையிலும் அடைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இந்நிலை மாறவேண்டுமானால் பயங்கரவாதத் தடைச்சட்டம் இந்நாட்டிலிருந்து நீக்கப்படவேண்டும்.
நாங்கள் ஒரு ஆட்சி மாற்றத்திற்காக வாக்களித்து நல்ல பெருமகனை ஜனாதிபதியாக தெரிவு செய்திருக்கின்றோம். இந்த ஆட்சி மாற்றம் ஏற்பட காரணமானவர்கள் சிறுபான்மையினத்தவர்களாவர். பயங்கரவாதத் தடைச்சட்டம் இந்த நாட்டில் இருக்கக்கூடாது என்பதே தமிழர்களின் வேண்டுகோளாக இருக்கின்றது. அப்போதுதான் தமிழர்களாகிய நாங்கள் இந்த நாட்டில் ஓரளவு பயமில்லாதவர்களாக வாழ முடியும்.
நாங்கள் இந்த நாட்டில் கொடூர ஆட்சி நடக்கின்றது, யுத்தத்தின்போது மனித உரிமைகள் மீறப்பட்டிருக்கின்றன, என்று சர்வதேசத்திடம் கோரிக்கை விடுத்து அவர்களிடம் பாதுகாப்பு கேட்டோம். எமக்காக சர்வதேசம் மூன்று முறை குரல் கொடுத்து வெற்றியை பெற்றோம். அதன்மூலம் போர்க்குற்றங்கள் தெளிவாகியது. வருகின்ற மார்ச் மாதம் ஐ.நா சபையில் மனித உரிமை மீறல்களுக்கான விளக்கங்களை கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போதைய அரசாங்கம் இதை பிற்போடும்படி மனித உரிமைகன் ஆணையாளர் நாயகத்திடம் ஒரு கோரிக்கையை விடுத்திருந்தது.
அதன் பிரகாரம் வருகின்ற செப்டம்பர் மாதத்திற்கு அது பிற்போடப்பட்டிருக்கின்றது. நாங்கள் வாக்களித்து வெற்றி பெற்றிருக்கின்ற தற்போதைய அரசாங்கம் செப்டம்பர் மாத்திலாவது இவ்விசாரணையை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று அவர் கூறினார்.