செய்திகள்

விராலிமலை ஆச்சிரமத்துக்கு வடக்கு முதல்வர் விஜயம்

இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்துள்ள பாத்திமாநகர் பிரேமானந்த ஆசிரமத்தை நேரில் பார்வையிட்டார்.

வெள்ளிக்கிழமை சென்னை சென்ற முதலமைச்சர் விக்னேஸ்வரன் அன்றிரவே விராலிமலை அடுத்துள்ள பாத்திமாநகரில் உள்ள பிரேமானந்த ஆசிரமத்திற்கு வந்தார். அவரை பிரேமானந்தா அறக்கட்டளை நிர்வாகிகள் வரவேற்றனர் இதன்பின்னர் ஆசிரமத்தினை சி. வி. விக்னேஸ்வரன் சுற்றிப்பார்த்து நிர்வாகிகளிடம் ஆசிரமத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

இதை தொடர்ந்து பிரேமானந்தாவை அடக்கம் செய்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் இரவு ஆசிரமத்தில் தங்கிய சி. வி. விக்னேஸ்வரன் சனிக்கிழமை அதிகாலை நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார்.

பின்னர் ஆசிரமத்தில் செயல்படும் உயர்நிலை பள்ளி வளாகத்தில் மரக்கன்றினை நட்டார். பின்னர் கார் மூலம் சென்னை திரும்பினார்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை துணைகண்காணிப்பாளர் பாலகுரு தலைமையில் காவல் ஆய்வாளர்கள் பாலசுந்தரம்(இலுப்பூர்) பழனிமுத்து( விராலிமலை) வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட போலீஸார் ஐம்பதுக்கும் மேற்ப்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.