செய்திகள்

விரைவில் ஒரு மணிநேர மின் தடை

தமிழ்நாடு மின்வாரிய நஷ்டத்தை சமாளிக்க, விரைவில், வீடுகளுக்கு, ஒரு மணி நேரம் மின் தடையை அமல்படுத்த, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில், 2008ல், மின் பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து, வீடு, தொழிற்சாலை, வணிக மின் இணைப்புகளுக்கு மின் தடை அமுல்படுத்தப்பட்டது. வீடுகளுக்கு, மின்தடை செய்யப்படும் இடம், நேரம் ஆகியவை மின் வாரியம் சார்பில், முன் கூட்டியே தெரிவிக்கப்பட்டது.

வல்லுார், வடசென்னை, மேட்டூர் விரிவாக்கம் ஆகிய, புதிய அனல் மின் நிலையங்களில் இருந்து, தமிழகத்திற்கு, கூடுதலாக, 2,500 மெகாவாட் மின்சாரம் கிடைத்தும், மின் பற்றாக்குறை குறையவில்லை. லோக்சபா தேர்தல் வெற்றி காரணமாக, கடந்த, ஆறு ஆண்டுகளாக அமலில் இருந்த மின் தடையை, கடந்த ஆண்டு ஜூன் முதல், தமிழக அரசு திடீரென ரத்து செய்தது. மின் பற்றாக்குறையை சமாளிக்க முடியாததால், வேறு வழியில்லாமல், செப்., முதல், தொழிற்சாலைகளுக்கு, மீண்டும் 20 சதவீதம் மின் தடையை அரசு அமல்படுத்தியது. ஆண்டுதோறும், கோடை வெயில் காரணமாக, மார்ச் முதல், மின் தேவை, படிப்படியாக அதிகரித்து, ஜூன், ஜூலை மாதங்களில், அந்த ஆண்டின் உச்ச அளவாக இருக்கும்.

அதன்படி, 2014 மார்ச் மாதம், சராசரியாக, 12 ஆயிரம் மெகாவாட்டாக இருந்த மின் தேவை, ஜூன், 24ம் தேதி – 13,775 மெகாவாட்டாக அதிகரித்தது. இதுவே, இதுவரை உச்ச மின் தேவை. ஆனால், தற்போது, மின் தேவை, 13 ஆயிரம் மெகாவாட்டை தாண்டி, விரைவில் 15 ஆயிரம் மெகாவாட்டை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.