செய்திகள்

விரைவில் திரைக்கு வரவிருக்கும் அமீரின் உதவியாளர் இயக்கிய டொலர் தேசம்

பருத்திவீரன், யோகி, ஆதி பகவான் ஆகிய தரமான படங்களை கொடுத்த அமீரிடம் பணியாற்றிய முத்துகோபால் என்பவர் இயக்கும் புதிய படத்திற்கு ‘டொலர் தேசம்’ என்று பெயர் வைத்துள்ளனர். அதீத உலகமயமாக்கலின் ஊடே வாழ்ந்து கொண்டிருக்கும் நம் தமிழ்ச் சமூகத்தின் பலதரப்பட்ட மக்களின் வாழ்வியலை விவரிக்கும் கதையாக டொலர் தேசம் உருவாகியிருக்கிறது.

சமூகத்தோடு இணைந்து பிண்ணப்பட்டுள்ள இந்த கதையில் முற்றிலும் புதுமுகங்கள் நடித்திருக்கின்றனர். நவீன திரைக்கதை உத்தியோடு இக்கதையை சொல்லியிருப்பதாக இயக்குனர் முத்துகோபால் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறும்போது, பொருளாதார படி நிலைகளால் வெவ்வேறாக பிரிக்கப்பட்டுள்ள மனிதர்களும், அவர்களின் பல்வேறு முகங்களும், வெகுஜன மக்கள் அறிந்திராத அவர்களின் அன்பும், வன்மமும், காதலும், வாழ்க்கையும் இந்த கதையின் முதுகெலும்பாக இருக்கும். இப்படத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கதாபாத்திரத்திங்களில் புதுமுகங்களை யதார்த்தமாக நடிக்க வைத்திருக்கிறோம். இதுதான் இந்த படத்தின் சிறப்பு. இப்படத்தை அனைத்துவிதமான ரசிகர்களையும் கவரும் வண்ணம் படமாக்கியிருக்கிறோம் என்றார்.

இப்படத்திற்கு அருண் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் ராம்ஜியிடம் துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். மேலும், ஏ.ஆர்.ரகுமான், யுவன் சங்கர் ராஜா ஆகியோரிடம் பணியாற்றிய பிரசாத் வி.குமார் என்பவர் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். பாடல்களை சினேகன் எழுதியிருக்கிறார். இத்திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இப்படத்தை இக்னைட் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.