செய்திகள்

இலங்கைக்கு எதிராக இன்னும் எச்சரிக்கையுடன் இந்தியா விளையாடியிருக்க வேண்டும்: கவாஸ்கர் ஆலோசனை

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி புனேவில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 18.5 ஓவரிலேயே 101 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பின்னர் விளையாடிய இலங்கை அணியும் 18 ஓவர்களில் எளிதில் வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் தான் அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார். பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இலங்கை தரப்பில் புதுமுக வேகப்பந்து வீச்சாளர் ரஜிதா 3 விக்கெட்டுக்களை சாய்த்தார். குறிப்பாக முதல் இரண்டு ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை எடுத்தார். அதேபோல், தனது இரண்டாவது டி20 சர்வதேச போட்டியில் பங்கேற்ற ஆல்-ரவுண்டரான ஷனாகா 3 விக்கெட்டுக்களை எடுத்தார்.
தோல்வி குறித்து கருத்து தெரிவித்த கேப்டன் டோனி, “இது முற்றிலும் வித்தியாசமான ஆடுகளமாக இருந்தது” என்றார்.
இந்நிலையில், இலங்கையின் புதுமுக பந்துவீச்சாளர்களுக்கு, இந்திய பேட்ஸ்மேன்கள் அதிக முக்கியத்துவம் அளித்து விளையாடி இருக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சுனில் வாகஸ்கர் கூறியுள்ளார்.
மேலும், “இலங்கை அணியில் புதுமுக வீரர்கள் விளையாடுகிறார்கள் என்பதை இந்திய வீரர்கள் புரிந்து கொள்ள வேண்டும். புதிய வீரர்களை எதிர்கொள்வது கொஞ்சம் வித்தியாசமானது. இலங்கை வீரர்கள் நன்றாக பந்து வீசினார்கள்.
இலங்கை அணியிடம் பெற்ற தோல்வி, இந்திய அணி மீண்டு எழுவதற்கான வாய்ப்பு. மீதமுள்ள இரண்டு போட்டிகளுக்கும் இந்திய வீரர்கள் நன்றாக பயிற்சி எடுத்து விளையாட வேண்டும்” என்று கவாஸ்கர் வலியுறுத்தினார்.