Search
Thursday 12 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜூனியர் உலகக்கோப்பை: இலங்கையை பந்தாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா

ஜூனியர் உலகக்கோப்பை: இலங்கையை பந்தாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா
19 வயதிற்குபட்டோருக்கான ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காள சேதத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்தியாவின் விக்கெட் கீப்பர் ரிஷாப் பந்த், கேப்டன் இஷான் கிஷான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
வங்காள தேச நேரப்படி ஆட்டம் காலை 8.30 மணிக்கு தொடங்கியதால் அதிக பனி மூட்டம் காணப்பட்டது. இதை சரியாக பயன்படுத்திய இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பெர்னாண்டோ, ரஹிரு குமாரா ஆகியோர் சிறப்பாக பந்து வீசினார்கள். இருவரது பந்தையும் இந்திய பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ள திணறினார்கள்.
இந்த தொடரில் அதிரடியாக விளையாடி வரும் ரிஷாப் பந்த் 28 பந்தில் 2 பவுண்டரிகளுடன் 14 ரன்கள் எடுத்து பெர்னான்டோ பந்தில் ஆட்டம் இழந்தார். இஷான் கிஷான் 7 ரன்கள் எடுத்த நிலையில் குமாரா பந்தில் ஆட்டம் இழந்தார்.
அதன்பின் வந்த அன்மோல்பிரீத் சிங், சர்பராஸ் கான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இலங்கை அணியின் சுழற்பந்தை சிறப்பாக எதிர்கொண்டு ரன்கள் சேர்த்தனர். சர்பராஸ் கான் 59 ரன்கள் எடுத்தும், அல்மோல்பிரீத் சிங் 72 ரன்கள் எடுத்தும் ஆட்டம் இழந்தனர்.
அதன்பின் வந்த வாஷிங்டன் சுந்தர் 43 ரன்னும், அர்மான் ஜாபர் 29 ரன்னும், லாம்ரோர் 11 ரன்னும், தாஹர் 17 ரன்னும் எடுக்க இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 267 ரன்கள் சேர்த்தது. இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் பெர்னாண்டோ அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
பின்னர் 268 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் பண்டாரா 2 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். மற்றொரு பேட்ஸ்மேன் அவிஷ்கா பெர்னாண்டோ 4 ரன்கள் எடுத்த நிலையில் அவேஷ் கான் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.
அதன்பின் வந்த கமிந்து மெண்டிஷ் 39 ரன்னும், ஷம்மு அஷான் 38 ரன்னும், விஷாத் ரந்திகா 28 ரன்னும், தமிகா சில்வா 24 ரன்களும் சேர்த்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆக, இலங்கை அணி 42.4 ஓவரிலேயே 170 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
72 ரன்கள் குவித்த அன்மோல்பிரீத் சிங் ஆட்ட நாயகன் விருது பெற்றார். நாளை மறுநாள் தொடங்கும் மற்றொரு அரையிறுதி போட்டியில் வங்காள தேசம்- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதில் வெற்றி பெறும் அணியுடன் இந்தியா இறுதிப்போட்டியில் 14-ந்தேதி மோதுகிறது.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *