Search
Thursday 13 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வங்காள தேசத்திற்கு எதிரான 2-வது டி20 போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி: தொடரை 2-0 என கைப்பற்றியது

வங்காள தேசத்திற்கு எதிரான 2-வது டி20 போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி: தொடரை 2-0 என கைப்பற்றியது

வங்காள தேசம்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா கேப்டன் டு பிளிசிஸ் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி குயின்டா டி காக், டி வில்லியர்ஸ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கடந்த போட்டியில் சொதப்பிய டி வில்லியர்ஸ் இந்த போட்டியில் 34 பந்தில் 40 ரன்கள் எடுத்தார். டி காக் 31 பந்தில் 44 ரன்கள் விளாசினார்.

ஐந்தாவது நபராக களம் இறங்கிய மில்லர் 28 பந்தில் 30 ரன்களும், அடுத்து வந்த ரோஸவ் 6 பந்தில் 19 ரன்களும் குவிக்க தென்ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது.

170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேச அணியின் தமீம் இக்பால், சவுமியாக சர்கார் ஆகியோர் களம் இறங்கினார்கள். இந்த ஜோடி முதல் ஐந்து ஓவரில் 41 ரன்கள் குவித்து தென்ஆப்பிரிக்காவை சற்று மிரட்டியது.

6-வது ஓவரை பர்னெல் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் தமீம் இக்பால் அவுட் ஆனார். அவர் 18 பந்தில் 13 ரன்கள் எடுத்தார். அடுத்து சாஹிப் அல் ஹசன் களம் இறங்கினார். அடுத்த ஓவரை தென்ஆப்பிரிக்கா அணியின் அறிமுக சுழற்பந்து வீச்சாளரான வீரர் எட்டி லெய்யே வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் சர்கார் அவுட் ஆனார். இவர் 21 பந்தில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 37 ரன்கள் குவித்தார்.

சர்கார் அவுட்டுக்கு பின் தென்ஆப்பிரிக்கா சுழற்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் அதிகரித்தது. பாங்கிசோ வீசிய 11-வது ஓவரில் சாஹிப் அல் ஹசனும், லெய்யே வீசிய 12-வது ஓவரில் முஷ்பிகுர் ரஹிம், சபீர் ரஹ்மானும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.

அதன்பின் வந்த மோர்தசா இரண்டு சிக்கர்கள் விரட்டி அவுட் ஆனார். கடைசி ஓவரை அபோட் வீசினார். இந்த ஓவரில் அபோட் இரண்டு விக்கெட்டுகள் எடுக்க வங்காள தேசம் 138 ரன்களில் சுருண்டது. இதனால் தென்ஆப்பிரிக்கா 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் லெய்யே, பாங்கிசோ, அபோட் தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.

இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என தென்ஆப்பிரிக்கா வென்றது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *