செய்திகள்

விழுந்த பனை: புத்தக விவாதத்துக்கு யாழ் பல்கலைக்கழகம் அனுமதி மறுப்பு

இலங்கைப் போர் குறித்து பிரபல மனித உரிமை ஆர்வலர் பேராசிரியர் ராஜன் ஹூல் தற்போது எழுதியிருக்கும் “ விழுந்த பனை- ராஜினியிலிருந்து போரின் முடிவு வரை “ என்ற புத்தகம் மீதான ஒரு விவாதம் இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்படுவதாக இருந்தது. இதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி மறுத்திருக்கிறது.

ஏற்கனவே பேராசிரியர் ராஜன் ஹூல், மறைந்த ராஜினி திராணகமவுடன் மற்றும் பேராசிரியர் தயா சோமசுந்தரம் மற்றும் பேராசிரியர் ஸ்ரீதரன் ஆகியோருடன் இணைந்து எழுதிய “முறிந்த பனை” என்ற புத்தகம் இலங்கைப் போரின் ஆரம்ப கட்டங்களைப் பற்றிய ஒரு ஆய்வாக பல விமர்சகர்களால் கருதப்பட்ட்து.

இந்தப் புத்தகம் ஒரு சர்ச்சைக்குரிய புத்தகம், இது குறித்த விவாதங்களை பல்கலைக் கழக வளாகத்தில் நடத்த அனுமதிக்க்க்கூடாது என்று யாழ் பல்கலைக் கழக மாணவர் சங்கமும், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் தனக்கு மனு தந்த்தாகவும், அதனையடுத்தே, பீடாதிபதிகளைக் கலந்தாலோசித்த பின், தான் இந்த முடிவை எடுத்த்தாகவும் கூறினார் பல்கலைக் கழக துணைவேந்தர் வசந்தி அரசரத்னம்.

ஆனால் இந்தப் புத்தகத்தை தான் படிக்கவில்லை என்றும் அவர் கூறினார். பல்கலைக் கழகத்தின் இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்த இந்தப் புத்தகத்தை எழுதிய ராஜன் ஹூல், பல்கலைக்கழகத்தின் இந்த தடையை மீறி, இந்த விவாதம் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி நூலக அரங்கில் நடந்ததாகக் கூறினார்.

இந்தப் புத்தகம் ஜனநாயகத்துக்கு எதிரானதல்ல, அதே போல இது தமிழ் தேசியத்துக்கு எதிரானது என்று சிலர் பட்டம் கட்டியிருப்பதிலும் ஒரு வித அர்த்தமும் இல்லை, மேலும் பல்கலைக் கழகத்தில் இது போன்ற புத்தக விவாதங்கள் பல நடத்தப்பட்டிருக்கின்றன, எனவே இந்த விவாதத்தைத் தடை செய்வதற்கு எந்தவித காரணமும் இல்லை என்று கூறினார் ராஜன் ஹூல்.

இன்று நடந்த விவாதத்தில் கொழும்பிலிருந்தும் தேசிய பல்கலைக்கழக ஆசிரியர்கள் சம்மேளனத்திலிருந்தும் பலர் கலந்துகொண்டிருந்ததாகவும் அவர்களில் எவரும் இந்த புத்தகத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் கூறினார் ராஜன் ஹூல்.