செய்திகள்

விவசாய அமைச்சர் ஐங்கரநேசனுடன் நோர்வே தூதுவர் சந்திப்பு

வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல், நீர் வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசனை இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிறீற் லோகீன் இன்று வெள்ளிக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். கண்டி வீதி, அரியாலையில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

வலிகாமம் பகுதியில் நிலத்தடி நீரில் கலந்துள்ள எண்ணெய் மாசு தொடர்பாக ஆராய்வதற்கு வடக்கு மாகாணசபையால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு தரையை ஊடுருவும் ரேடார் கருவியை வழங்கி உதவுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திடம் கேட்டிருந்தது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பயன்படுத்தி வரும் ரேடார் உபகரணம் நோர்வே நாட்டால் அன்பளிப்பாக வழங்கப்பட்டதாகும்.

இதன் அடிப்படையில், கடந்த வாரம் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களும் நோர்வே நிபுணர்களும் வடக்கு அமைச்சர் பொ.ஐங்கரநேசனைச் சந்தித்து இதுதொடர்பாகக் கலந்துரையாடியதோடு, நிபுணர் குழுவையும் சந்தித்திருந்தனர்.

இதன் தொடர்ச்சியாகவே நோர்வே நாட்டுத் தூதுவரும் வடக்கு அமைச்சர் பொ.ஐங்கரநேசனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதன்போது, தரையை ஊடுருவும் டேராரை விரைவில் யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவருதற்கு ஆவன செய்வதாகத் தெரிவித்த நோர்வே தூதுவர், நிபுணர்குழுவாலும் தூய நீருக்கான விசேட செயலணியாலும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் விபரமாகக் கேட்டறிந்து கொண்டார்.