செய்திகள்

விவியன் ரிச்சட்ஸ் உலகின் தலைசிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரராக தெரிவு

உலகின் தலைசிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரராக மேற்கிந்திய அணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரர் சேர் விவியன் ரிச்சட்ஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

கிரிக்கின்போ இணையத்தளத்தின் த கிரிக்கெட் மன்ந்திலி சஞ்சிகை இந்த தெரிவை மேற்கொண்டுள்ளது. குறிப்பிட்ட சஞ்சிகை உலகின் தலைசிறந்த ஓரு நாள் வீரரை தெரிவு செய்வதற்காக 50 பேரை நியமித்திருந்தது.முக்கிய முன்னாள் வீரர்கள்,வர்ணணையாளர்கள், மற்றும் கிரிக்கெட் எழுத்தாளர்கள் அடங்கிய குழுவினரே இதற்காக நியமிக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் 29 பேர் சேர் விவியன் ரிச்சட்சினை உலகின் தலைசிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரராக தெரிவுசெய்துள்ளனர்.
அவருக்கு அடுத்தபடியாக சச்சின் , அக்ரம், கில்கிறிஸ்ட் மற்றும் டோனி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இரண்டாவது இடத்திற்காக சச்சினுக்கும், அக்ரத்திற்கும் இடையில் கடும் போட்டி நிலவியுள்ளது. ஏழு நாடுகளை சேர்ந்த 21 வீரர்களை தெரிவு செய்து அவர்களிலிருந்து 5 பேரை இக்குழுவினர் தெரிவுசெய்துள்ளனது.

சேர் விவியன் ரிச்சட்சே உலகின் தலைசிறந்த ஓரு நாள் கிரிக்கெட் வீரர் என்பது குறித்து பெருமளவிற்கு கருத்துடன்பாடு காணப்பட்டுள்ளது.அவர் சகலவிதமான ஆடுகளங்களில் வெற்றிகரமாக பிரகாசித்தவர்,தற்போது போன்று துடுப்பாட்ட வீரருக்கு சாதகமான அம்சங்கள் எதுவும் காணப்படாத நிலையில் அவரது காலத்தின் அற்புதமான வேகப்பந்து வீச்சாளர்கள் பலரை அடித்து நொருக்கினார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவர் 15 வருடங்களுக்கு மேல் 3 அல்லது நான்காவது வீரராக களமிறங்கி பந்துவீச்சாளர்களை திணறடித்தார் என நியுசிலாந்து அணியின் முன்னாள் வீரர் மார்ட்டின் குரோவ் தெரிவித்துள்ளார்.