செய்திகள்

வீட்டிலுள்ளோர் ஆலயம் சென்ற வேளை கதவுடைத்துப் பெறுமதியான பொருட்கள் திருட்டு: அளவெட்டியில் சம்பவம்

யாழ்.அளவெட்டி கும்பிளாவளைப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகிலுள்ள வீடொன்றில் வீட்டு உரிமையாளர்கள் வீட்டைப் பூட்டி விட்டு அருகிலுள்ள ஆலயமொன்றிற்குச் சென்றிருந்த நிலையில் குறித்த வீட்டின் முன்கதவை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் அங்கிருந்த பணம்,நகை மற்றும் உடைமைகள் என மூன்று இலட்சத்து 89 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர்.குறித்த திருட்டுச் சம்பவம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

வீட்டின் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 56 ஆயிரம் ரூபா பெறுமதியான பணம்,ஐந்து பவுண் நகை,மோட்டார்ச் சைக்கிள்,துவிச்சக்கர வண்டி என்பனவே இவ்வாறு திருட்டுப் போயுள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளர் நேற்றுத் திங்கட்கிழமை செய்த முறைப்பாட்டின் பிரகாரம் தெல்லிப்பழைப் பொலிஸார் புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
யாழ்.நகர் நிருபர்-