செய்திகள்

வீதி புனரமைப்பில் அதிகாரிகள் அலட்சியம்: மட்டு. மாமாங்கம் மக்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட மாமாங்கம் பிரதேசத்தின் நான்காம் குறுக்கு வீதியை புனரமைத்து தருமாறும் கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் தமது வீதியை புனரமைக்க உள்வாங்கப்பட்ட நிலையில் அவை அதிகாரிகளினால் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நேற்று வியாழக்கிழமை மாலை 5.00மணியளவில் பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாமாங்கம் நான்காம் குறுக்கு வீதியானது மிக மோசமான நிலையில் உள்ள வீதியின் நிலைமை தொடர்பில் கடந்த காலத்தில் பல தடவைகள் உரிய தரப்பினரின் கவனத்துக்கு கொண்டு சென்ற போதிலும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் கடந்த மாதம் 19ஆம் திகதி மாமாங்க பிரதேசத்தில் உள்ள அனைத்து அமைப்புகளும் இணைந்து கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் மாமாங்கம் நான்காம் குறுக்கு வீதியை புனரமைப்பது என தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் பிரதேச செயலகத்தில் உள்ள கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தின் திட்டத்திற்குள் இந்த வீதி உள்வாங்கப்படாமல் அது அழிக்கப்பட்டு வேறு ஒரு வீதி சேர்க்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளரின் கவனத்துக்கு கொண்டு சென்ற போதிலும் தமது பிரச்சினை தொடர்பில் கூறிய போது அவற்றினை காதில் வாங்கிக் கொள்ளாமல் தம்மை புறக்கணித்ததாக மாமாங்கம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் வி.புஸ்பநாதன் தெரிவித்தார்.

இந்த வீதி மிக மோசமான இருப்பதுடன் மழை காலத்தில் பயணிக்க முடியாத நிலையில் உள்ளது. எனவே கிராமத்துக்கு ஒரு திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட இந்த வீதியை புனரமைப்பதை தடுத்தி நிறுத்தினால் பிரதேச செயலகம் முன்பாக சாகும் வரையிலான உண்ணா விரத போராட்டத்தினை முன்னெடுப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் வி.தவராஜாவிடம் தொடர்பு கொண்ட போது,
மாமாங்கம் 4 ஆம் குறுக்கு வீதி ஒரு சிலரால் தெரிவு செய்யப்பட்டதாகவும் மாமாங்க பிரதேச மக்கள் தெரிவு செய்த திட்டத்துக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் அடுத்த திட்டத்தில் மாமாங்கம் 4ஆம் குறுக்கு வீதி உள்வாங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

IMG_0082

IMG_0086

IMG_0087

IMG_0117

IMG_0124