செய்திகள்

வெடித்துச் சிதறிய பாக் படகு: 4 பேர் பலி! இந்திய எல்லைப் பகுதியில் சம்பவம்!!

இந்தியா-பாகிஸ்தான் கடல் எல்லைப்பகுதியில் போர்பந்தர் அருகே வெடிபொருட்களுடன் கூடிய பாகிஸ்தான் படகு ஒன்று அவர்களாலேயே தீப்பிடிக்கச் செய்து வெடித்ததில் 4 பேர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு இந்த திடுக்கிடும் சம்பவம் நடந்துள்ளது. இந்திய-பாகிஸ்தான் கடல் எல்லையில் இந்த வெடிபொருள்கள் நிரம்பிய பாகிஸ்தான் படகைக் கண்ட இந்திய கப்பற்படையினர் அதனை நெருங்கியுள்ளனர். ஆனால், அந்த படகில் இருந்த 4 பணியாளர்கள் படகை வெடிக்கச் செய்துள்ளனர். இதில் அந்த 4 பேரும் பலியானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

டிசம்பர் 31ஆம் தேதி போர்பந்தர் பகுதியின் அரபிக் கடலில் 365 கிமீ தூரத்தில் இந்திய கப்பற்படையினரும் கண்காணிப்பு விமானமும் மீனிபிடிப் படகு ஒன்று சுற்றிக் கொண்டிருப்பதை கண்டனர். ஏற்கெனவே கராச்சி அருகேயுள்ள கேதி பந்தரில் இத்தகைய படகு ஒன்று சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக உளவுத்துறை செய்திகள் வந்துள்ளன.
2
இது குறித்து கடலோரக் காவற்படையினர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “நாங்கள் அந்தப் படகை செலுத்தி வந்தவர்களிடம் தொடர்ந்து எச்சரிக்கை அளித்து வந்தோம், ஆனால் எந்த எச்சரிக்கையையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை. அப்போது படகில் மறைந்திருந்த பணியாளர் ஒருவர் படகுக்கு தீ வைத்தார். இதனால் பெரும் வெடிப்பு ஏற்பட்டு படகு முழுதும் நெருப்புமயமானது.” என்று கூறப்பட்டுள்ளது.

“டிசம்பர் 31ஆம் தேதி நாங்கள் பெற்ற உளவுத்துறை அளித்த தகவல்களின் படி, கராச்சி அருகே கேதி பந்தரில் உள்ள மீன்பிடி படகு ஒன்று அரபிக்கடலில் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்தது. இந்தத் தகவல்களின் படி டோர்னியர் கடலில் தேடுதல் வேட்டை மேற்கொண்டது. சந்தேகத்துக்குரிய அந்தப் படகு இருக்கும் இடமும் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகே அந்தப் படகை நெருங்கினோம்.

கடலோரக் காவற்படை கப்பல் அந்த மீன்பிடிப் படகில் உள்ளவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினோம், ஆனால் அவர்கள் இந்திய எல்லையைக் கடந்து அந்தப் பகுதிக்குச் செல்ல படகை வேகமாகச் செலுத்தத் தொடங்கினர்.

சுமார் ஒருமணி நேரம் துரத்தல் படலம் நடந்தது. எச்சரிக்கையாக துப்பாக்கி சூடு நடத்திய பிறகு அந்தப் படகு நிறுத்தப்பட்டது. விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அவர்களிடம் எச்சரிக்கப்பட்டது. ஆனால், படகுக்கு தீ வைத்து வெடிக்கச் செய்தனர்.

கடும் இருளிலும், பலமான காற்றினாலும் மோசமான வானிலையாலும் அவர்களை மீட்க முடியவில்லை. எரிந்து போன படகு அங்கேயே மூழ்கியது. மூழ்கிய படகை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடலோரக் காவற்படையினரும், பிற பாதுகாப்பு படைகளும் இப்பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக கண்காணிப்பை முடுக்கி விட்டுள்ளது. காரணம் கடல் பகுதியிலிருந்து அச்சுறுத்தல் இருப்பதாக தொடர்ந்து உளவுத்துறை தகவல்கள் வந்தவண்ணம் இருந்தன” என்று அந்த செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் நோக்கத்துடன் இந்த நாசவேலை திட்டமிட்டிருக்கலாம் என்று இந்தியத் தரப்பில் கூறப்படுகிறது.