செய்திகள்

வெடி பொருள் மீட்பு; சம்பவத்தை திசைதிருப்ப சிலர் முயற்சி

சாவகச்சேரி பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து பொலிஸாரினால் வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில், தேசிய பாதுகாப்புக்கு எந்த பிரச்சினையும் கிடையாது என்றும் கொள்கை ரீதியாக தேசிய பாதுகாப்பில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
அத்துடன், இவ்வாறான மீட்பு நடவடிக்கைகள் நாளாந்தம் நடைபெறும் நிலையில், சிலர் இந்த சம்பவத்தை வேறு வழியில் திசைதிருப்பி கொண்டு செல்ல முயற்சிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சாவகச்சேரி பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து நேற்று முன்தினம் புதன்கிழமை பொலிஸாரினால் தற்கொலை குண்டு அங்கி, கிளைமோர் குண்டுகள் மற்றும் துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹெட்டியாராச்சி இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
அவர் இங்கு மேலும் பேசுகையில்:
“இந்த சம்பவத்தினால் தேசிய பாதுகாப்புக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. கொள்ளை ரீதியில் தேசிய பாதுகாப்பில் எந்த மாற்றத்தையும் செய்ய வேண்டிய அவசியமும் கிடையாது. இச் சம்பவத்தினால் தேசிய பாதுகாப்புக்கு பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக சிலர் தெரிவிக்கின்றனர்.
ஆனால், தேசிய பாதுகாப்பு இருப்பதனால் தான் இவ்வாறான விடயங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன.
பொலிஸாரும் புலனாய்வு துறையினரும் வடக்கில் மட்டுமல்லாது நாட்டின் சகல பகுதிகளிலும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் மிகவும் விழிப்பாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதற்காக இந்த விடயத்தை சிறியதாக கருதவில்லை. உரிய விசாரணைகள் நடத்தப்படுகின்றன. நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
எவ்வாறிருப்பினும், இவ்வாறான மீட்புகள் மற்றும் கைதுகள் போன்ற சம்பவங்கள் எமக்கு நாளாந்தம் பதிவாகின்றன’ என்று கூறினார்.
இதேநேரம், கைப்பற்றப்பட்ட வெடிப்பொருட்கள் மூலம் ஜனாதிபதிக்கு இலக்கு வைக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியிருந்ததாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்:
“நீங்கள் சொல்வது போன்று இது ஜனாதிபதியை கொலை செய்வதற்காக கொண்டு வரப்பட்டிருந்ததா அல்லது இல்லையா என்பது பற்றி எனக்குத் தெரியாது. விசாரணை நடைபெற்று வருகிறது. ஊடகங்கள் கூறுவது போன்று விசாரணையின் போது அனுமானங்களை செய்ய முடியாது’ என்று தெரிவித்தார்.
இதேநேரம், இந்த விடயத்தை சிலர் வேறு வழியில் திசை திருப்பி கொண்டு செல்ல முயற்சிப்பதாக சுட்டிக்காட்டிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், இச் சம்பவம் பற்றி தகவல் தெரிந்திருந்தால் விசாரிக்க வேண்டும் என்றும் இந்த நடவடிக்கைகளில் மக்களும் உதவ வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய செயற்பாடுகள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் விழிப்பாகவும் எச்சரிக்கையுடன் இருப்பதாகவும் சிலர் சொல்வதைப் போன்று அப்படியே பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கினாலுமே கூட அதற்கு முகம் கொடுக்கவும் அரசாங்கமும் பாதுகாப்பு தரப்பினரும் தயாராக இருப்பதாகவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
n10