செய்திகள்

வெனிசூலாவால் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து என ஒபாமா அறிவிப்பு

வெனிசூலா அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தானது என தெரிவிக்கும் ஆணையொன்றை பிறப்பித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா ஏழு பேரிற்கு எதிராக தடைகளை விதித்துள்ளதுடன் அந்த நாடு தனது எதிர்கட்சியினரை நடத்தும் விதம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
வெனிசூலா மக்களின் மனித உரிமைகளை துஸ்பிரயோகம் செய்த அந்த நாட்டின் அதிகாரிகள் எவருக்கும் அமெரிக்காவிற்கு வருவதற்கு அனுமதி வழங்கப்படாது,அதேபோன்று ஊழல்களில் ஈடுபட்டவர்களுக்கும் அமெரிக்காவில் வரவேற்பு கிடைக்காது.அவர்களுடைய சொத்துக்களை முடக்கவும், அமெரிக்காவின் நிதிசேவைகளை அவர்கள் பயன்படுத்துவதை தடுக்கவும் எங்களிடம் வழிமுறைகள் உள்ளன என வெள்ளைமாளிகை தெரிவித்துள்ளது.
எதிர்கட்சிகளை அச்சுறுத்துவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகள் குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலையடைந்துள்ளது,என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா ஜனாதிபதியால் விடுக்கப்பட்டுள்ள உத்தரவு வெனிசூலாவில் ஜனநாயக நடைமுறைகளை பாதிக்கும் விதத்தில் நடந்துகொண்டவர்கள் மற்றும் மனித உரிமை துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிரானது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.குறிப்பிட்ட ஏழு நபர்களுக்கும் அமெரிக்காவில் உள்ள சொத்துக்கள் முடக்கப்படும்,அவர்கள் அமெரிக்காவிற்குள் வருவதற்கு தடைவிதிக்கப்படும்,அமெரிக்க பிரஜைகள் அவர்களுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது எனவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
மாணவர்கள் உட்பட அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யுமாறும் அமெரிக்கா கோரியுள்ளது.