செய்திகள்

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பி.எஸ்.எல்.வி. சி 27 ராக்கெட்

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவன் விண்வெளி மையத்தில் இருந்து “ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.- 1டி’ செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி 27 ராக்கெட்  வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் சீறிப்பாய்ந்த 19 நிமிஷம் 25 நொடிகளில் ராக்கெட் பாகங்கள் ஒவ்வொன்றாக தனித் தனியாக பிரிந்து புவி வட்டப்பாதையை செயற்கைக் கோள் அடைந்தது.  இந்திய பிராந்திய வழிகாட்டி அமைப்புக்கான 4-ஆவது செயற்கைக்கோள் இதுவாகும். மொத்தம் 7 செயற்கைக்கோள்கள் கொண்ட இந்த தொகுப்பில் ஏற்கெனவே 3 செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டுள்ளன.

கடந்த 9-ஆம் தேதி ஏவப்படுவதாக இருந்த இந்த ராக்கெட் , தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது தள்ளிவைக்கப்பட்டது.  கோளாறு சரிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று மாலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்திய பிராந்திய வழிகாட்டி அமைப்பு: ஜி.பி.எஸ். அமைப்பு போன்று இந்திய பிராந்தியத்தில் தரை வழி, வான் வழி, கடல் வழி போக்குவரத்துக்கு உதவுவதற்காக இந்திய நேவிகேஷன் அமைப்பு உருவாக்கப்படுகிறது.
இந்த அமைப்பு உருவாக்கப்பட்டால், பேரிடர் மீட்புப் பணிகளுக்கும், வரைபட தயாரிப்பு போன்றவற்றுக்கும் உதவியாக இருக்கும். வாகன ஓட்டுநர்களுக்கு ஒலி வடிவிலும் தகவல்களை வழங்க முடியும். போக்குவரத்துக்கான தகவல்களை வழங்குவதோடு, ராணுவம், விமானப்படை, கப்பல்படைக்கும் துல்லியமான தகவல்களை இந்த அமைப்பின் மூலம் வழங்க முடியும்.  இந்தச் செயற்கைகோள் இந்தியாவில் வசிப்பவர்களுக்கு மட்டுமல்லாமல், எல்லையைச் சுற்றி 1,500 கி.மீ. தொலைவுக்கு தெற்கு ஆசியாவில் இருப்பவர்களுக்கும் பயனளிக்கும்.

இஸ்ரோ தலைவராக ஏ.எஸ்.கிரண்குமார் ஜனவரியில் பொறுப்பேற்ற பிறகு, விண்ணில் செலுத்தப்படும் முதல் செயற்கைக்கோள் இது. இந்த செயற்கைக்கோளும் அதன் துணை பாகங்களும் பெங்களூரூவில் உள்ள இஸ்ரோ மையத்தில் தயாரிக்கப்பட்டவை.

நேவிகேஷன் செயற்கைக்கோள்களை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் விண்ணில் ஏவியுள்ளன. அமெரிக்காவிடம் ஜிபிஎஸ், ரஷ்யாவிடம் குளோனாஸ், ஐரோப்பாவிடம் கலிலியோ, சீனாவிடம் பெய்டோ, ஜப்பானிடம் குவாசி ஷெனித் போன்ற நேவிகேஷன் செயற்கைக்கோள்கள் உள்ளன. இதைப் போலவே இந்தியாவும் நேவிகேஷன் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. அதன்படி, மொத்தம் 7 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. இதில் 3 செயற்கைக்கோள்கள் ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளன.