வெற்றிலையில் மஹிந்த போட்டியிடுவது உறுதி: அடித்துக் கூறுகின்றார் வாசு
எதிர்வரும் பொதுத்தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வெற்றிலைச் சின்னத்தில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவது நிச்சயமாகும் என்று ஜனநாயக இடது சாரி முன்னணியின் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
எதிர்வரும் 6 ஆம் திகதி மஹிந்த தலைமையில் முதலாவது பிரசாரகூட்டம் அநு ராதபுரத்தில் நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவிக்கையில் கூறியிருப்பதாவது:
“எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐ.தே.கட்சி தோல்வியடைவது நிச்சயமாகும். நாட்டு மக்கள் அக்கட்சியின் பலாத்காரமான சிறுபான்மை ஆட்சியை வெறுத்து விட்டனர். எனவே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவே எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு பின்னர் மக்கள் ஆதரவுடன் இந்நாட்டின் பிரதமராக பொறுப்பேற்பார்.
நாம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை கைப்பற்றுவோம். அதன் வெற்றிலை சின்னத்தில் மகிந்த ராஜபக்ஸ பிரதமர் வேட்பாளராக களமிறங்குவது நிச்சயமாகும். இதனை எவராலும் தடுக்க முடியாது. சந்திரிக்காவுக்கு இதனை தடுப்பதற்கான எவ்வித அதிகாரமும் கிடையாது.
அவ்வாறு வெற்றிலைச்சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்காமல் போனால் அதற்கு பின்னர் அதற்கான மாற்று மருந்து எம்மிடம் இருக்கின்றது. மஹிந்தவை பிரதமராக்குவதற்கு அனைத்து வியூகங்களையும் வகுத்துள்ளோம். தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் ஜுலை 6 ஆம் திகதி மகிந்த தலைமையில் முதலாவது பொதுக்கூட்டம் அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளது. இந்நாட்டில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த எம்பிக்கள் மாகாண சபை உறுப்பினர்களான 110க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொள்வார்கள் என்றார்.