செய்திகள்

வெற்றி கொடியை பார்த்தால் 92 வயது பலனை அடைவேன்; கருணாநிதி ஆசை

ஒவ்வொரு மாவட்ட செயலாளரும் குறைந்த பட்சம் எத்தனை தொகுதிகளை வெற்றி பெற்றுத் தர வேண்டுமென்ற பொறுப்பை ஏற்க வேண்டும் என்று இங்கு ஸ்டாலின் குறிப்பட்டது, உங்களை மிரட்டுவதற்கோ, இல்லாவிட்டால் அவர் எண்ணியதைப்போல் செய்யாவிட்டால் என்ன ஆகுமோ என்று பயப்படுவதற்கோ சொல்லப்பட்ட வார்த்தைகள் அல்ல என்று திமுக தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்தார்.

சென்னையில் நடைபெற்ற திமுக., மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கருணாநிதி பேசியதாவது:

திமுக., ஒரு அரசியல் கட்சி மாத்திரமல்ல; இது ஒரு சமுதாய இயக்கம். இந்த இயக்கத்தைக் கட்டிக் காக்க வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கெல்லாம் இருக்கிறது. இதே கருத்தை வைத்து நீண்ட நேரம் பேசுகின்ற ஆற்றல் அன்பழகனுக்கு உண்டு என்றாலும், இன்றைய சூழ்நிலையில் அவரும், நானும் எல்லாவற்றிலும் இணைந்திருக்க வேண்டும் என்பதற்கேற்ப, அவரைப்போலவே, எனக்கும் குரல் வளம் இல்லை, நானும் தினந்தோறும் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுத் தான் வருகிறேன், அநேகமாக உங்களோடு கலந்து பேசுகின்ற அளவுக்கு விரைவில் குணம் பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. அந்த நம்பிக்கை வீண் போகாமல், குணம் பெறும் நம்பிக்கை மாத்திரமல்ல, நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையை இழக்காமல், நாம் இந்தத் தேர்தலில் எதிரிகளுக்குப் பாடம் கற்பிக்கின்ற வகையில் நம்முடைய பணியை வகுத்துக் கொண்டு செயலாற்றுவோம்.

கடினமான செயல்:

 

இந்த கூட்டத்தில், மு.க. ஸ்டாலின் தன்னுடைய உரையில், ஒரு கடினமான ஆனால் உங்களுக்குச் சுலபமான, பாடுபட்டால் பயன் கிடைக்கும் என்ற ஒரு விஷயத்தை உங்களிடத்திலே சொன்னார். நடைபெறவிருக்கின்ற இந்தத் தேர்தலில் ஒவ்வொரு மாவட்டக் கழகச் செயலாளரும் குறைந்த பட்சம் எத்தனை தொகுதிகளை வெற்றி பெற்றுத் தர வேண்டுமென்ற பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார். அவர் அவ்வாறு சொன்னதற்குக் காரணம், நீங்கள் கடினமாக உங்கள் உழைப்பை நல்கி உங்களுடைய ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில், இதிலே ஒரு போட்டி ஏற்பட்டால் தான், நாம் நினைத்தவாறு வெற்றியினை எய்திட முடியும் என்பதற்காக அவர் அப்படிச் சொன்னார். அப்படி வெற்றி பெற்றுத் தர என்று எடுத்துக் கொள்ளாமல், நாம் நமக்காகப் பாடுபட வேண்டும். நமக்காக உழைத்திட வேண்டும். நமக்காக என்றால், நமக்கு நாமே என்பதைப் போல, அந்த உழைப்பு நமக்குத் தருகின்ற வெற்றி அடுத்தடுத்து வருகின்ற பல தேர்தல்களுக்கு அடையாளமாக, அல்லது தொடக்கமாக அமைய வேண்டும் என்கிற ஆர்வத்திலே தான் அவர் இங்கே பேசும் போது அந்த ஒரு கருத்தைச் சொன்னார். உங்களை மிரட்டுவதற்கோ, இல்லாவிட்டால் அவர் எண்ணியதைப்போல் செய்யாவிட்டால் என்ன ஆகுமோ என்று பயப்படுவதற்கோ சொல்லப்பட்ட வார்த்தைகள் அல்ல. அவரையும் சேர்த்துத் தான் அந்த நிபந்தனையை இங்கே இந்த மேடையிலே அவர் சொன்னார்.

வெற்றிக் கொடியை காண்பேனா?


ஆகவே அந்தக் கருத்தை நீங்கள் ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டு, குறைந்த பட்சம் சிறிய மாவட்டங்களில் இரண்டு தொகுதிகளிலும், அதை விட பெரிய மாவட்டங்களில், மூன்று நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றுக் கொடுத்தால் ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா என்று அவரைக் கேட்கின்ற அளவுக்கு, அந்த அளவுக்கு சவால் விடுகின்ற அளவுக்கு நீங்கள் வென்று காட்டுவீர்கள் என்று நான் நம்புகிறேன். நான் நிச்சயமாக நம்புகிறேன். வெற்றியை அறுவடை செய்து என்னிடத்திலே அந்த வெற்றிக் கொடியைக் காட்டுவீர்களேயானால் நான் ஏறத்தாழ 92 ஆண்டுகள் வாழ்ந்ததற்கான பயனை, அந்த வெற்றிக் கொடியைப் பார்த்தவுடன் நான் அடைய முடியும். இவ்வாறு கருணாநிதி பேசினார்.

 

N5