செய்திகள்

வெலிஓயாவில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் கைத் தொழில் பேட்டை

வெலி ஓயா பகுதியில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் கைத் தொழில் பேட்டை அமைக்க அமைச்சர் றிசாட் பதியுதினால் அடிக்கல் நாட்டப்பட்டது.
கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் ஊடாக செயற்படுத்தப்படும் பிரதேச கைத்தொழில் பேட்டை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் வெலிஓயா பிரதேச செயலகப் பகுதியில் கைத்தொழில் பேட்டைக்கு அடிக்கல்லினை கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்கள் நாட்டினார்.
நிகழ்வை ஆரம்பித்து வைத்த உரையாற்றிய கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிசாட் பதியுதீன்,
50 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவுள்ள வெலிஓயா கைத்தொழில் பேட்டைக்கு ஆரம்ப வேலைகளுக்கு முதல் கட்டமாக 10 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்த அமைச்சர் இந்த கைத்தொழில் பேட்டைக்குள் ஆடைத்தொழிற்சாலை மற்றும் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அமைக்கப்படும் எனவும் குறிப்பிட்டதுடன் இந்த வருட இறுதிக்குள் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன் நடைபெறப் போகும் பாராளுமன்றத் தேர்தலில் தனது கட்சியானது எந்த கட்சியுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிடப் போகிறது என கேட்கிறார்கள் அவர்களுக்கு ஒரு விடயத்தை தெரிவிக்க விரும்புகிறேன் எந்த கட்சி தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைக்கிறதோ அக்கட்சியுடன் இணைந்து மக்களுக்கு சேவைசெய்வேன் எனத் தெரிவித்தார்.
இது தவிர, வன்னி மாவட்டத்தில் தேசிய பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்பாகவும் அதை நிவர்த்தி செய்வது மற்றும் தொண்டர் ஆசிரியராக பணியாற்றுபவர்களின் நிரந்தர நியமனங்கள் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர் மேற்படி விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதியுடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேற்படி நிகழ்வைத் தொடர்ந்து வெலிஓயா, சம்பத்நுவர மகாவித்தியாலயத்தில் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து 200 தையல் இயந்திரங்கள் மற்றும் பாடசாலைக்கான உபகரணங்கள், தளபாடங்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.
IMG_5533 IMG_5565