செய்திகள்

வெலே சுதாவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சிலவற்றில் திருத்தங்களை மேற்கொள்ள அனுமதி

வெலே சுதாவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சிலவற்றில் திருத்தங்களை மேற்கொள்ள அனுமதி வெலே சுதா என்றழைக்கப்படும் கம்பொல விதானகே சமன்த குமாரவுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள் சிலவற்றில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா டி லிவேரா தென்னகோன் முன்னிலையில் குறித்த, வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சட்டமா அதிபர் திணைக்களம், நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

வெலேசுதா, அவரின் மனைவி மற்றும் உறவு முறை சகோதரிக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் முன்வைத்த 57 குற்றச்சாட்டுக்களில் 29 குற்றச்சாட்டுக்களில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என சட்டமா அதிபர் திணைக்களம், நீதிமன்றத்திற்கு அறிவித்தது. அதற்கான அனுமதியை வழங்கிய நீதிமன்றம் மே மாதம் 5 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்துவைத்துள்ளது. போதைப் பொருள் விநியோகத்தில் 17 கோடி ரூபா பெறுமதியான சொத்து கொள்வனவு செய்யப்பட்ட குற்றச்சாட்டில் அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் வரை வெலே சுதா உள்ளிட்ட குழுவினரை விளக்கமறியலில் வைக்குமாறு உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வெலே சுதா வெளியிட்ட கருத்துக்களின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவு கடந்த மாதம் 10 ஆம் திகதி 06 மணித்தியாலங்கள் விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.