செய்திகள்

வெளிநாடு தப்பிச் சென்ற பொலிஸ் மா அதிபர்: கைது செய்ய இன்டர்போல் உதவி

கலாநிதிப் பட்டம் பெற்ற முன்னாள் பொலிஸ் மா அதிபருக்கு மேலதிக படிப்பிற்காக பணமும் கொடுத்து 300 இலட்சம் ரூபா பெறுமதியான வீடொன்றையும் கொடுத்துள்ளதாக தடுப்புக்காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் போதைப்பொருள் கடத்தலின் முக்கிய புள்ளியான வெலேசுதா தெரிவித்துள்ளான்.

வெலேசுதா பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்துவதற்கு ஒத்தாசையாகவிருந்த இந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் கடந்த ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்த உடனே குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு தப்பித்துச் சென்றுள்ளதால் அவரைக் கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாரின் (இன்ரபோல்) உதவியைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

அத்துடன் வெலேசுதாவிடம் மாதாந்தம் 25 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்ட கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரை இன்னும் ஒரு சில வாரங்களில் கைது செய்யவுள்ள நிலையில், அவர் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அவதானமாக இருப்பதுடன் நாட்டிலிருந்து தப்பிச்செல்ல முடியாத வகையில் பின் தொடர்ந்து வருகின்றனர்.

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் வெலேசுதாவின் மனைவி மற்றும் தாயார் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஹெரோயின் வியாபாரத்துடன் சில பெண்களுக்கும் தொடர்புள்ளதாகவும் அவர்கள் கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வசிப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.