செய்திகள்

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பிஸ்டல் வெள்ளை வான் ஒன்றிலிருந்து மீட்பு (படங்கள்)

நுவரெலியா மாவட்டத்தின் கினிகத்தேனை தியகல பொலிஸ் சோதனைச் சாவடியில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வான் ஒன்றிலிருந்து பொலிஸார் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட (பிஸ்டல்) துப்பாக்கி ஒன்றினை கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் வான் சாரதி உட்பட பயணித்த 7 பேரையும் அட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இதை பற்றி கேட்கும் போது தங்களுக்கு இது எவ்வாறு வந்தது என தெரியவில்லை என பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட குறித்த பிஸ்டலை சோதனைக்குட்படுத்தும் போது பிஸ்டல் மண்ணில் புதைக்கப்பட்டிருந்ததாகவும் ஏற்கனவே பிஸ்டல் பாவிக்கப்பட்டிருப்பதாகவும் அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனை விற்பனை செய்வதற்கா அல்லது வேறு தேவைக்காகையா கொண்டு செல்லப்பட்டது என பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அவிசாவளை எஹலியகொட பகுதியிலிருந்து இராகலை நோக்கி வாத்தியக் குழுவினர் சென்று கொண்டிருந்த வான் ஒன்றிலிருந்தே 05.04.2015 அன்று மாலை வேளையில் இவ்வாறு குறித்த பிஸ்டல் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த வானில் பயணித்தவர்கள் நிகழ்வு ஒன்றில் வாத்தியம் வாசிக்க சென்று கொண்டிருந்ததாக பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த வானை சந்தேகப்பட்டு பரிசோதித்த போது வானில் ஒரு ஆசனப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இது பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டது.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர்களை 06.04.2015 அன்று அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

pistol white van (1)

pistol white van (2)

pistol white van (3)

pistol white van (4)

pistol white van (5)