செய்திகள்

வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி அடைத்துவைக்கப்பட்டிருந்த 7 பெண்கள் உட்பட 10 பேர் மீட்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு அனுப்புவதாகக் கூறி சுமார் 6, 7, மாத காலமாக மருதானை பகுதியில் பலாத்காரமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 7 பெண்கள் உட்பட 10 பேர் மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவிக்கிறது.

மருதானையில் தற்காலிகமாக தடு த்து வைக்கப்பட்டிருந்த மேற்படி 10 பேரையும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அத்துகோரள மற்றும் பணியகத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மீட்டுள்ளதாக பணியகம் தெரிவிக்கிறது. சுற்றுலா விசாவில் மத்தள விமான நிலையம் ஊடாக இவர்கள் அபுதாபி, சவூதி அரேபியா, போன்ற நாடுகளுக்கு வீட்டுப்பணிப் பெண்களாக அனுப்புவதாக கூறியே இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட பெண்களில் ஒருவர் சுமார் 7 மாத காலமாக மருதானை விடுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. சில பெண்கள், ஒரு மாத காலம், 2 மாதகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். 18, 19, 20 மற்றும் 38 வயதுடைய பெண்களே விடுதியில் இருந்ததாக பணியகம் தெரிவிக்கிறது.

பொலன்னறுவை, எம்பிலிபிட்டிய, தெனியாய, பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. புதுவிதமான இந்த வேலைவாய்ப்பு வர்த்தகத்தை ஆரம்பித்துள்ள மூன்று பேரை பணியகத்தின் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கைதானவர்களில் ஒருவர் அக்கறைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் அடுத்த இருவரும் மருதானை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் தலைமறைவாகியுள்ளதுடன் அவரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த மோசடியான வேலைவாய்ப்பு வர்த்தகத்தில் தொடர்புடைய சகலரையும் கைது செய்யுமாறு அமைச்சர் தலதா அத்துகோரள பணிப்புரை வழங்கியுள்ளார்.

R-06