செய்திகள்

வெளிநாட்டு மீட்புக் குழுக்களை வெளியேற வேண்டுகோள்

நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர பூகம்பத்திற்கு 7365 பேர் பலியாகி உள்ள நிலையில், மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் வெளிநாட்டு குழுவினர் தங்கள் பணியை முடித்துக்கொள்ளும்படி நேபாள அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
மீட்பு பணிக்குப் பதிலாக, நிலநடுக்கத்தால் வாழ்வைத் தொலைத்த லட்சக்கணக்கான மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் மிகப்பெரிய பணியை தொடங்கவிருப்பதால் வெளிநாடுகள் தங்கள் குழுவினரை விலக்கிக்கொள்ளும்படி அரசு கூறியிருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
அதேசமயம், இடிபாடுகளை அகற்றுவதற்கு நவீன உபகரணங்கள் தேவை என்பதால் இந்தியாவிடம் உதவி கேட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை இந்திய ஊடகங்கள் புகழ்ந்து பேசி வருவதாக நேபாள மக்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் விமர்சித்து வரும் நிலையில், மீட்புக்குழுவினரை விலக்கிக்கொள்ளும்படி நேபாள அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்பட்டது.
ஆனால், மீட்பு நடவடிக்கையில் இந்தியாவின் பங்களிப்பு மிகப்பெரிய அளவில் இருந்தாக பாராட்டியுள்ள நேபாளம், அடுத்தகட்டமாக மறுவாழ்வு பணிகளிலும் இந்தியா ஈடுபடும் என்று தெரிவித்துள்ளது.
மீட்பு பணி முடியும் நிலையில் இருப்பதாகவும், இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்பதற்கு மிகக் குறைவான வாய்ப்புகளே உள்ளதால் வெளிநாட்டு மீட்புக் குழுக்களை புறப்படும்படி நேபாளம் கூறியதாகவும் இந்திய மீட்புப்படை தலைவர் ஓ.பி.சிங் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.