செய்திகள்

வெளிப்படையாக விற்பனை செய்யுமளவுக்கு போதைபொருள் வியாபாரம் யாழ்ப்பணத்தில் நடக்கிறது

யாழ்.மாவட்டத்தில் இன்று அதிகரித்துள்ள சமூக சீர்கேடுகளுக்கு அதிகரித்த போதைப்பொருள் பாவனை கரணம் என்றும் அரசாங்கம் திட்டமிட்டு இந்த போதைப்பொருள் வியாபாரத்தை ஊக்குவிக்கிறது என்றும் வலி.வடக்கின் மீள்குடியேற்றச் சங்கத் தலைவரும்,வலி.வடக்குப் பிரதேச சபையின் உபதவிசாளருமான எஸ்.சஜீவன் குற்றம் சாட்டியுள்ளார்.

போதைப்பொருட்களை மறைமுகமாக விற்பனை செய்வதை விடுத்து இப்போது பரவலாக வெளிப்படையாக விற்பனை செய்யும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது என்றும் அவர் கவலை வெளியிட்டார்.

அண்மையில் புங்குடு தீவு மகா வித்தியாலய உயர்தர மாணவி கூட்டு வன்புணர்வின் பின் கோரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று சனிக்கிழமை(23.5.2015)கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

2009 ஆம் ஆண்டு போருக்கு பின்னர் இளைய சமூகம் பாரிய பின்னடைவுகளை எதிர்நோக்கியிருப்பது ஒரு துர்ப்பாக்கியமான நிலைமை. இலங்கையில் தமிழ்பகுதிகளில் திட்டமிட்டவகையில் சமூகச் சீரழிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது கடும்வேதனைக்கு உரியது.

சிறிலங்கா அரசாங்கம் பெரும் பிரயத்தனங்களின் மத்தியில் இந்த திட்டமிட்ட சீரழிவைச் செய்கின்றது என்பதை சமூகம் உணர்ந்தும் தட்டிக்கழித்து அதற்குள் ஆட்பட்டுப்போவதை ஏற்றுக்கொள்ளமுடியாது.

கற்பழிப்புக்களும் கொலைகளும் கொள்ளைகளும் பெருகிப்போவற்கும் இளைய சமூகம் இனி ஒரு விதி செய்யப்புறப்படாமல் இருப்பதற்கும் இந்த திட்டமிட்ட செயல் வழிவகுக்கும்.

இலங்கை அரசாங்கம் தனது உள்நோக்கத்தை வெளிப்படுத்தாமல் வெறும் மாயையினை ஏற்படுத்தி தமிழ் மக்களின் இன உணர்வுகளை சீரழிப்பதற்க்காக இந்த திட்டமிட்ட போதைப்பொருள் வியாபாரத்தை ஆரம்பித்திருக்கிறது. போதைப்பொருட்களை மறைமுகமாக விற்பனை செய்வதை விடுத்து இப்போது பரவலாக வெளிப்படையாக விற்பனை செய்யும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது.

இதனை ஊடகங்கள் சுட்டிக்காட்டியும் அதனை அசட்டைசெய்யும் அரசு இதற்காக நடவடிக்கைகளை எடுக்காதது ஏன் ? எதற்காக இதற்கான கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசு பின்னிற்கிறது?திட்டமிட்டசெயல் என்பதாலா இந்த செயற்பாட்டிற்கு அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காக்கிறது? அண்மையில் நடந்த வித்தியா படுகொலையுடன் தொடர்பு பட்டவர்கள் போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களாகவுள்ளனர். இவர்களுக்குப் போதைப்பொருட்களை வழங்கியவர்களை உடனடியாக கைது செய்யும்போது இந்த போதைப்பொருட்களைக் கட்டாயத்தின்பேரில் பரப்புபவர்களை கைது செய்து கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கமுடியும் .

இந்தத் திட்டமிட்ட போதைப்பொருள் விற்பனையினை கடுமையாக எதிர்ப்பதோடு இதற்காகவும் சமூக அக்கறை கொண்டவர்கள் வீதியில் இறங்கி கடுமையாக போராட வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது என்பதையும் இந்தச் சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருட் பாவனையால் காலம் எதிர்பார்க்க முடியாத பல விளைவுகளை யாழ்நகரம் எதிர்கொண்டுள்ளது. பாலியல் பலாத்காரம் கொலை கொள்ளை குற்றச்செயல்கள் சட்டத்தை மீறும் தன்மை என யாழ்குடாநாடு நாற்றமடிக்கிறது.கந்தபுராண கலாச்சாரம் நிலவிய பூமியென பெயர்பெற்ற யாழ்ப்பாணம் பாலியலும் வன்கொடுமைகளும் மலிந்த நகரமாக மாற்றப்பட்டுவிட்டது.

போதைப்பொருட்கள் வலுக்கட்டாயமாக இளைய சமூகத்திற்குள் திணிக்கப்படுகிறது அதற்கு இளைஞர்களை அடிமையாக்கும் நடவடிக்கை மிக கடுகதியில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இதைக் கால ஓட்டத்தில் நாம் உணர்ந்துகொள்வதை விடுத்து இப்பொழுதே அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க அரசும் பொலிஸாரும் உடனடியாக முன்வரவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றேன்.
திட்டமிட்டரீதியில் பரப்பப்படும் இந்த போதைப்பொருட்களுக்கு அடிமையாகும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டுப்பிரசுரங்களையும் அறிவுறுத்தல்களையும் ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தவும் ,அவற்றைத் திட்டமிட்டு பரப்புவதையும் விற்பனை செய்பவர்களையும் உடனடியாக சட்டத்தின்முன் நிறுத்துவதற்கும் அனைவரும் இணைந்து செயற்பட முன்வரவேண்டும் என்றும் கூறினார்.
யாழ்.நகர் நிருபர்-