செய்திகள்

“வெள்ளைக் கொடியுடன் இராணுவத்தினரிடம் சரணடைச் சொல்லி இருக்கிறார்கள்” என்று அப்பா எனக்கு கூறினார் : ஜெனீவாவில் நடேசனின் மகன்

விடுதலைப்புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் பா. நடேசன் 2009 மே 18ஆம் திகதி இலங்கை இராணுவத்திடம் சரண் அடைவதற்கு முன்னர் அன்று காலை தன்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சரண் அடைவதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாகவும் தாங்கள் சரண் அடையப்போவதாகவும் கூறியதாக அவரது மகன் ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் சபை கட்டடத் தொகுதியில் நடைபெற்ற உப மாநாடு ஒன்றின்போது  தெரிவித்திருக்கிறார்.

பிரித்தானிய தமிழர் பேரவை, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனமாகிய பசுமைத் தாயக அமைப்பு மற்றும் அமெரிக்க தமிழர் அரசியல் செயலவை ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசியபோதும் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதும், தனது தகப்பனாருடன் இறுதி நாட்களில் பேசியவற்றை பகிர்ந்துகொண்ட நடேசனின் இளவயது மகன், தமிழ் மக்களுக்கு என்ன நடைபெற்றது என்பதை வெளி உலகத்துக்கு கொண்டு வருவது அவசியம் என்றும் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

யுத்தத்தின் இறுதிக் காலப் பகுதியில் அப்பா என்னுடன் அடிக்கடி கதைத்துக் கொண்டிருந்தார். மே 15 ஆம் திகதி என்னுடன் கதைக்கும் போது, சரண் அடைய வேண்டிய ஒரு சூழ்நிலை வரும் என்றும் பல தரப்பினருடனும் கதைத்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார். அப்போது தொலைபசியை எனது அம்மாவிடம் கொடுத்தார். நான் எனது அம்மாவுடன் கதைத்தேன்.

அம்மாவுடன் கதைக்கும் போது அவர் ஒரு பிரச்சினையும் நடக்காது என்று கூறினார். இன்றைக்கு இருக்கிறோம், ஆனால் , நாளைக்கு என்ன நடக்குமோ தெரியாது என்றும் கூறினார். அப்போது சாப்பிட்டு விட்டீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர், சமைப்பதற்கு வெளியே போக முடியாமல் உள்ளது. தொடர்ந்து ஷெல் அடிக்கிறார்கள் என்று கூறினார். அதுதான், நான் அவருடன் கடைசியாக கதைத்தது.

பின்னர் 18 ஆம் திகதி காலை அப்பாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. தாங்கள் சரண் அடையப்போவதாக கூறினார். ராஜதந்திரிகள் உட்பட பலருடனும் இது தொடர்பில் கதைத்துள்ளதாகவும், வெள்ளைக் கொடியை பிடித்த வண்ணம் இலங்கை இராணுவத்திடம் சரண் அடையுமாறு அவர்கள் தமக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் அவர் கூறினார்.

அப்பா தனது சரண் அடைதல் தொடர்பில் விபரமாக எனக்கு யார் யாருடன் தொடர்பு கொண்டார் என்று எதுவும் கூறவில்லை. நானும் அவர்கள் இருந்த நிலைமையை கருதி அவற்றை கேட்கவில்லை. ஆனால், அவர்கள் மே 15 ஆம் திகதி முதல் சரண் அடைவது தொடர்பில் தீவிரமாக அவர்கள் ஈடுபட்டிருந்தனர் என்று எனக்கு தெரியும்.

பல ஆயிரம் உயிர்களை கொன்று குவித்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து விட்டதாக இலங்கை அரசாங்கம் இன்று கூறுகிறது. ஆனால் , உண்மையில் தமிழ் மக்களுக்கு என்ன நடைபெற்றது என்பதை வெளி உலகத்துக்கு கொண்டு வருவது அவசியம்.

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக வெளி நாடுகளில் உள்ள அமைப்புக்கள் சிறந்த முறையில் செயலாற்றின. ஆனால் , இன்று அவர்களின் செயற்ப்பாட்டில் ஒரு மந்த நிலை காணப்படுகிறது. முன்னர் ஊக்கத்துடன் செயற்பட்டது போல என்றும் அவர்கள் ஊக்கத்துடன் செயற்ப்பட வேண்டும் என்பதே அனைவரதும் விருப்பம்.

புலம் பெயர் தமிழ் மக்கள் எப்பொழுதுமே , தாயகத்தில் உள்ள தமிழ் மக்களுக்கு ஒரு பெரும் பலமாக இருந்திருக்கிறார்கள். அவர்களின் செயற்பாடுகள் எப்பொழுதும் அங்குள்ள மக்களுக்குன் உதவியாக இருந்திருக்கின்றன. அவர்களின் செயற்பாடுகளினாலேயே, இலங்கை அரசாங்கம் இன்று நிலை குலைந்து சில சில இடம்களில் விட்டுக்கொடுக்க வேண்டிய நிலைமைகளுக்கு சென்றிருக்கிறார்கள். ஆகவே, முன்னர் போல புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் ஊக்கத்துடன் செயற்பட வேண்டும்.