வெள்ளைவான் கடத்தலின் பின்னணியில் முக்கிய அதிகாரிகள்: ஆதாரங்கள் உள்ளது என்கிறார் முன்னாள் பொலிஸ் பேச்சாளர்
“வெள்ளை வேன் கடத்தல்களின் பின்னால் இருந்த முக்கிய இராணுவ அதிகாரிகள் தொடர்பில என்னிடம் ஆதாரம் உள்ளது. அக்காலப்பகுதியில் கருணா அம்மான் உள்ளிட்ட ஆயுதக் குழுக்களின் நடமாட்டம் காணப்பட்டது. வெள்ளை வேன் கலாசரம் தொடர்பில் விசாரணை ஒன்று நடத்தப்பட்டால் நான் சாட்சியமளிக்க தயார்” என என முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான னவும் பிரசாந்த ஜயகொடி மேலும் குறிப்பிட்டார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ மற்றும் அவரது அமைச்சின் கீழ் செயற்பட்ட ஆயுதக் குழுக்களின் கொலை அச்சுறுத்தல் காரணமாகவே நான் நாட்டை விட்டு வெளியேறி அவுஸ்திரேலியா சென்றதாகவும் தெரிவித்த அவர், தான் உயிர் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்து நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் நீதியான விசாரணை ஒன்று நடத்தப்பட்டு தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்” எனவும் வலியுறுத்தினார்.
ஒரு வருடமும் ஏழு மாதங்களின் பின்னர் அவுஸ்திரேலியாவில் இருந்து நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் நாடு திரும்பிய முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் இரத்தினபுரி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயகொடி நேற்று மாலை கொழும்பு கலதாரி ஹோட்டலில் செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தினார். அதிலேயே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். .
அவர் அங்கு மேலும் குறிப்பிட்டதாவது,
“நான் பொலிஸ் பேச்சாளர் பதவியில் இருந்து அகற்றப்பட்டமைக்கு இன்று வரை சரியான காரணம் எனக்கு தெரியாது. எனினும் சில காரணங்களை நான் உணர்ந்துள்ளேன். அதாவது கடந்த ஆட்சியாளர்களுக்கு சாதகாமாக நான் கருத்து வெளியிடாமல் இருந்ததால் என்னை மாற்றியிருக்கலாம்.
அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. நான் அரசுக்கு எதிராக கருத்து வெளியிடுவதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களை தூண்டுவதாகவும் எச்சரிக்கப்ப்ட்டேன். இது தொடர்பில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன முன்னிலையில் எனக்கு எதிராக விசாரணை இடம்பெற்றது. எனது விளக்க உரையின் ஒலி வடிவம் என்னிடம் இருந்ததால் நான் அப்படி அரசுக்கு எதிராக செயற்படவில்லை என்பதை என்னால் நிரூபிக்க முடிந்தது.
பல்வேறு தொலைபேசி அழைப்புக்கள் ஊடாக வந்த அழைப்புக்கள் ஊடாக உன்னையும் உனது குடும்பத்தினரையும் கொலை செய்வோம், சவப் பெட்டியை தயாராக வைத்துக்கொள் என்ற பல்வேறு அச்சுருத்தல்கள் எனக்கு கிடைத்தன. அது தொடர்பில் நான் எனது மேலதிகாரிகளுக்கு அறிவித்த போதும் எவ்வித பலனும் இல்லை. அந்த தொலைபேசி இலக்கங்களை மையப்படுத்தி விசாரித்து பார்த்ததில் அந்த இலக்கங்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டவை என்பதை நான் அறிந்துகொண்டேன்.
இந் நிலையில் காட்டாட்சியொன்று இடம்பெற்றுக்கொன்டிருந்த, ஐக்கிய நாடுகள் சபையினால் உறுதிப்படுத்தப்பட்ட மனித நேய விடயங்களுக்குள் உள்ள வாழும் உரிமை கூட இல்லாத நிலையில் நான் அவுஸதிரேலியாவுக்கு தப்பிச் சென்றேன். சட்ட ரீதியாகவே நான் அவுஸ்திரேலியா சென்று அகதி அந்தஸ்து பெற்றேன். அங்கும் என்னை தேடிவந்ததாக தகவல் வரவே பல இடங்களில் சென்று வாழ்ந்தேன். எனினும் அவுஸ்திரேலிய அரசு எனக்கு பூரண ஆதரவு தந்தது.
நான் மரணத்துக்கு பயமில்லை. எனினும் எனது மகள், மனைவி விடயத்தை நினைத்தே இவ்வாறு நான் தப்பிச் செல்ல வேண்டி ஏற்பட்டது. அக்காலத்தில் செயற்பட்ட வெள்ளை வேன் கலாசாரம் தொடர்பில் நன்கு அறிந்திருந்த நிலையில் நான் இவ்வாறு சென்றேன். வெள்ளை வேன் கடத்தல்கள் தொடர்பில் செயற்பட்ட அல்லது பின்னணியில் இருந்த இராணுவத்தின் அதிகாரிகள் பலர் தொடர்பில் எனக்கு தகவல் தெரியும். இது தொடர்பில் உரிய விசாரணை ஒன்று நடத்தப்பட்டால் நான் சாட்சியம் அளிக்கவும் ஆதாரங்களைக் கையளிக்கவும் தயாராக உள்ளேன்.
அப்போது பாதுகாப்பு அமைச்சின் கீழ் ஆயுதக் குழுக்கள் செயற்பட்டன. இவர்களாலேயே அச்சுறுத்தல் விடுக்கப்பட்டன. புலிகள் இயக்கத்தில் மிகப் பயங்கரமாக செயற்பட்டு 600 பொலிஸாரை சுட்டுக்கொன்ற கருணாவின் ஆயுதக் குழு யுத்ததின் பின்னரும் நடமாடியது. தண்டிக்கபடவேண்டியவர்கள் ஆயுதக் குழுவாக நடமாடிய நிலையில் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்ட வேண்டிய பொலிஸார் பலர் அவ்வாறு செயற்படவில்லை. . அதன் பலனாக கடந்த ஆட்சியில் பொலிஸ் திணைக்களம் பல்வேறு அழுத்தங்களுக்கு முகம் கொடுத்தது. சுதந்திரமாக செயற்பட முடியாமல் போனது. அதன் வெளிப்பாடே கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் மைத்திரிபால சிரிசேனவின் ஆட்சியை ஏற்படுத்தினர்.”