செய்திகள்

வெள்ளை வான் விவகாரத்தில் புதிய திருப்பம்: கடற்படை அதிகாரி ஒருவர் கைது

கொழும்பு, தெஹி­வளைப் பிர­தே­சத்தில் வைத்து மூன்று தமிழ் மாண­வர்கள், அவர்­க­ளது நண்­பர்­க­ளான இரு முஸ்லிம் மாண­வர்கள் உள்­ளிட்ட ஐவரை கடத்­தி­யமை தொடர்பில் சந்­தே­கத்தின் பேரில் கடற்­ப­டையின் முக்­கிய அதி­காரி ஒருவர் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார். கடத்தல் விவகாரத்தில் இதன் மூலம் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்த கடத்­தல்­க­ளுக்கும் அப்­போது கடற்­ப­டையில் இருந்த சில முக்­கிய அதி­கா­ரி­க­ளுக்கும் இடையே தொடர்­புகள் உள்­ள­தாக தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்டிருந்த நிலையில் புல­னாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ஒரு­வரின் கீழ் இது தொடர்பில் விசேட விசா­ரணை ஒன்று இடம்­பெற்று வரும் நிலை­யி­லேயே லெப்ரின்ட் கொமான்டர் தர கடற்­படை அதி­கா­ரியை நேற்று கைது செய்­துள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவான் குண­சே­கர தெரிவித்தார்.

குறித்த கடற்­படை அதி­கா­ரியை புல­னாய்வுப் பிரி­வினர் தடுப்புக் காவலில் வைத்து விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்த தீர்­மா­னித்­துள்­ள­தா­கவும் அதற்­க­மைய நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவான் குண­சே­கர மேலும் குறிப்­பிட்டார்.

2008 ஆம் ஆண்­டுக்கும் 2009 ஆம் ஆண்­டுக்கும் இடைப்­பட்ட காலப்­ப­கு­தியில் தலை நகரின் பல பிர­தே­சங்­களில் இருந்தும் கடத்­தப்­பட்டு திரு­கோ­ண­மலை, கொழும்பு கடற்­படை முகாம்­களில் தடுத்து வைக்­கப்­பட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­படும் காணாமல் போயுள்ள 11 பேர் தொடர்பில் 7 இற்கும் மேற்­பட்ட கடற்­படை அதி­கா­ரிகள் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர்.

இந் நிலையில் குறித்த காலப்­ப­கு­திக்குள் தலை நகரின் மரு­தானை, மட்­டக்­குளி, கொட்­டஞ்­சேனை, புளூ­மென்டல் மற்றும் தெஹி­வளை ஆகிய பிர­தே­சங்­களில் காணாமல் போனோர் இது வரை உயிருடன் உள்­ள­னரா என்­பது தெரி­ய­வ­ராத நிலையில் இந்த காணாமல் போனோர் தொடர்பில் பொறுப்புக் கூறத்­தக்க அனை­வ­ரி­டமும் குற்றப் புல­னாய்வுப் பிரிவு சிறப்பு விசா­ர­ணையை ஆரம்­பித்­தி­ருந்­தனர்.

முன்­ன­தாக இது தொடர்பில் கடற்­ப­டையின் முன்னாள் ஊடகப் பேச்­சாளர் கப்டன் தஸ­நா­யக்­கவை புல­னாய்வுப் பிரிவு விசா­ரணை செய்­து­விட்டு விடு­தலை செய்­துள்ள போதிலும் தேவை ஏற்­படின் அவரை மீண்டும் விசா­ரணை செய்­ய­வுள்­ள­தா­கவும் இந்த கடத்தல் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்ட குழுக்­களில் ஒன்று அவரின் கீழ் இருந்­துள்­ளமை தொடர்­பி­லான சந்­தே­கத்­தி­லேயே இந்த விசா­ர­ணைகள் தொடர்­வ­தா­கவும் புல­னாய்வுப் பிரிவு குறிப்­பிட்­டி­ருந்­தது.

இது வரை குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் சுமார் 35 வாக்கு மூலங்­களை இந்த விவ­காரம் குறித்து பதிவு செய்துள்ள நிலையில் தெஹிவளையில் வைத்து 2008 ஆகஸ்ட் மாதம் கடத்தப்பட்ட இரு முஸ்லிம் மாணவர்கள் உள்ளிட்ட 5 மாணவர்களின் விவகாரம் தொடர்பில் கடற்படையின் அதிகாரி ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.