செய்திகள்

வெள்ளை மாளிகையை புகைப்படம் எடுக்க விதிக்கப்பட்டிருந்த 40 ஆண்டுகால தடை நீக்கம்

அமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுக்க விதிக்கப்பட்ட தடை தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.
உலகின் அதிகாரமிக்க மாளிகைகளில் ஒன்றானது அமெரிக்காவின் வெள்ளை மாளிகை. அதிகார சக்தியின் அடையாளமாக விளங்கும் இம்மாளிகையில் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுக்க கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் புகைப்படம் எடுப்பதற்கான தடை தளர்த்தப்படுவது குறித்த அறிவிப்பை, அதிபரின் மனைவி மிச்செல் ஒபாமா, தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.
இதனையடுத்து வெள்ளை மாளிகையில் குவிந்த ஏராளமான சுற்றுலா பயணிகள், தங்களை புகைப்படங்களை எடுத்து “செல்பி வித் ஒயிட் ஹவுஸ்” என்று தங்களது சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். வெள்ளை மாளிகையில் புகைப்படம் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும் வீடியோ பதிவு செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும் புகைப்படம் எடுக்கும் போது பிளாஷை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளை மாளிகைக்குள் புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.