செய்திகள்

வேந்தர் மூவீஸுக்கு ரஜினி படம் நடிக்க வேண்டும் – லிங்கா விநியோகஸ்தர்கள் கோரிக்கை

ரஜினி நடிப்பில் வெளியான லிங்கா திரைப்படத்தின் பிரச்னை இன்னும் முடிவுக்கு வரவில்லை. படம் நஷ்டம் ஏற்பட்டதால் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் ஆரம்பத்தில் போர்கொடி தூக்கினர். பின்னர் லிங்கா படத் தயாரிப்பு தரப்பிலிருந்து ஒரு தொகை தரவும் முடிவெடுக்கப்பட்டு பிரச்னையும் தீர்க்கப்பட்டது.

ஆனால் அந்த பணம் எங்களுக்கு முழுமையாக வந்து சேரவில்லை என்று மீண்டும் விநியோகஸ்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் விநியோகஸ்தர்கள் கூறியதாவது, “ஆரம்பத்தில் பனிரெண்டரை கோடி தருவதாக ஒப்புக் கொண்டனர். அதுமட்டுமில்லாமல் வேந்தர் மூவீஸ் நிறுவனத்திற்கு ரஜினி குறைந்த நாள் கால்ஷீட்டில் ஒரு படம் நடித்து தருவார் என்றும் அந்தப்படத்திலிருந்து வரும் லாபத்தை வைத்து எஞ்சிய லிங்கா பட நஷ்டத்தை ஈடுகட்டிக் கொள்ளுங்கள் என்றும் ரஜினி தரப்பிலிருந்து திருப்பூர் சுப்பிரமணி கூறியிருந்தார்.

அனைத்தையும் ஏற்றுக் கொண்டு லிங்கா பிரச்னை முடிந்துவிட்டதாக முன்னர் அறிவித்திருந்தோம். ஆனால் தரவேண்டிய பனிரென்டரை கோடியில் 5.9 கோடி மட்டுமே தந்தனர். மீதி 9.1 கோடிரூபாய் தரவில்லை.

பணத்தைப் பற்றி தாணுவிடம் கேட்டால் திருப்பூர் சுப்பிரமணியிடம் இருக்கிறது என்கிறார், திருப்பூர் சுப்பிரமணியனிடம் கேட்டால் மதுரை அன்புச் செழியனிடம் இருக்கிறது என்கிறார். எங்களுக்கு பணமும் தரவில்லை, படமும் நடித்து தராமல் தற்பொழுது தாணு தயாரிப்பில் ரஜினி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனவே வேந்தர் மூவீஸ் நிறுவனத்திற்கு ரஜினி ஒரு படம் நடித்து தரவேண்டும். இல்லையென்றால் கூடுதலாக 15 கோடி ரூபாய் தரவேண்டும் என்று விநியோகஸ்தர்கள் தரப்பிலிருந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.