செய்திகள்

வேறு கெட்ட வார்த்தைகள் தெரிந்திருந்தால் அதனையும் பயன்படுத்தி ரணிலை திட்டியிருப்பேன்: வாசுதேவ

வேறு கெட்ட வார்த்தைகள் தெரிந்திருந்தால் அதனையும் பயன்படுத்தி பிரதமர் ரணிலைத் திட்டியிருப்பேன் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அவர் அதில் மேலும் கூறியுள்ளதாவது ;

பாராளுமன்றத்தின் நன்மைக்காகவே நான் அவ்வாறான வார்த்தைகளைப் பயன்படுத்தினேன். எப்படியிருப்பினும் எனக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது. பாராளுமன்றத்தில் இவை ஒரு சாதாரணமான விடயமாகும்.

அந்த நேரத்தில் ஏற்பட்ட அளவுக்கு அதிகமான கோபம் காரணமாகவே இவ்வாறு பேசினேன். நான் அவ்வாறு திட்டியதற்காக ஒரு போதும் கவலைப்படுவதில்லை. குறித்த சந்தர்ப்பத்தின் போது நான் பயன்படுத்தியமை வெறும் கடுமையான வார்த்தைகளை மாத்திரம் அல்ல, அவரைத் தாக்கும் வகையிலான வார்த்தைகளை தான் பயன்படுத்தினேன்.

அதனையும் விட கடுமையான கெட்ட வார்த்தைகள் தெரிந்திருந்தால் அதனையும் நான் பயன்படுத்தியிருப்பேன்.பிரதமர் நடந்து கொண்ட முறையும் அவ்வாறானதே.

நான் உரையாற்றுவதற்காக ஒதுக்கப்பட்ட நேரம் அது. பிரதமர் என்னைப் பேச விடாமல் அமர வைக்கப் பார்த்தார். எனவே தான் நான் அவ்வாறு பேசினேன்.பிரதமர் மட்டுமல்ல கடவுள் என்றாலும் சட்டதிட்டங்களுக்கும், சம்பிரதாயங்களுக்கும் அமையவே செயற்பட வேண்டும்.

பிரதமர் யானை தலையுடனே செயற்படுகின்றார். என்னிடம் போன்று எத்தனை பேரிடம் அவர் அவ்வாறு நடந்து கொண்டுள்ளார்.இவ்வனைத்தையும் பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருந்து இறுதியில் இவ்வாறு பேசிவிட்டேன்.அதன் பின்னரும் நான் பிரதமரை சந்தித்தேன்.நாங்கள் ஒருவருக்கு ஒருவர் சுமுகமாக கலந்துரையாடிக் கொள்ளவில்லை.
அவசியம் என்றால் கடமை நடவடிக்கைகளுக்காக கலந்துரையாடுவேன்.