செய்திகள்

வேலணை பிரதேச செயலாளரின் இடமாற்றத்துக்கு எதிராக யாழ் செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் – வேலணை பிரதேச செயலாளராக இருந்துவந்த சதீஸ்கரன் மஞ்சுளாதேவியின் இடமாற்றத்தை இரத்துச் செய்ய கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று சனிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் பிரதேச செயலக செயலாளராக எஸ்.தயானந்தா நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் பிரதேச செயலாளராக இருந்த சுகுணரதி தெய்வேந்திரம் வேலணை பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இதனால் வேலணை பிரதேச செயலாளராக இருந்த மஞ்சுளாதேவி வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையிலேயே தமது பிரதேச செயலாளரை இடமாற்ற செய்ய வேண்டாம் என வலியுறுத்தி பிரதேச மக்கள் ஒன்றிணைந்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.

சமூக சேவையாளரே எமக்கு வேண்டும், புதிய செயலாளரை தடுத்து நிறுத்து, மக்களுக்காக கடலில் நடந்த பெண், எமக்காக துடித்த அம்மா, எங்களுக்கு பழைய செயலாளர் தான் வேண்டும், புதிய செயலாளர் வேண்டாம் என எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் தமது பிரதேச செயலாளர் இடமாற்றம் செய்யப்பட்டால் தமது போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள், பிரதேச மக்களுக்காக தான் பிரதேச செயலாளர்.

ஆகையால் எமது கோரிக்கையை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் செயற்படுத்த வேண்டும், சிலருடைய அரசியல் விருப்பு வெறுப்புக்களுக்காக மக்கள் சேவையாளர்களை இடமாற்றம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.