செய்திகள்

வேலுப்பிள்ளையின் மகன் உதித்தெழுந்து இந்நாட்டில் இனவிரிசலை ஏற்படுத்த வில்லை: மனோ கணேசன்

வேலுப்பிள்ளை பிரபாகரன் வானத்தில் இருந்து குதித்து வந்தொ அல்லது மண்ணுலகில் உதித்து எழுந்தோ இந்நாட்டில் இருந்திராத இன விரிசலை ஏற்படுத்த வில்லை. உண்மையில் இந்நாட்டில் தொன்று தொட்டு இருந்து வந்த இனவாதம்தான் வேலுப்பிள்ளை பிரபாகரனை விடுதலை புலி பிரபாகரனாக மாற்றியது. இதை இந்த நாட்டின் அனைத்து இன அரசியல் தலைவர்களும் மனதில் கொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இந்து-பெளத்த கலாச்சார பேரவை விழா, கொழும்பு இராமகிருஷ்ணா மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது. ஹெல உறுமய கட்சி தவிசாளர் அதுரலியே இரத்தின தேரர் எம்பி, அமைச்சர்கள் கரு ஜெயசூரிய, விஜேதாச ராஜபக்ச, பீலிக்ஸ் பெரேரா ஆகியோர் பங்குபற்றிய இந்த விழாவில் சிங்கள மொழியில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

இந்த விழாவின் நோக்கங்களையிட்டு நான் மகிழ்வுறுகிறேன். சிங்கள, தமிழ் அல்லது இந்து, பெளத்த ஐக்கியம் என்பது நல்ல விடயம்தான். ஆனால், இந்த ஐக்கியம் என்பதற்கு இருக்கின்ற முதன்மை நிபந்தனையை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். அதுதான், சமத்துவம் என்பதாகும். மொழிகள், மதங்கள், இனங்கள் மத்தியில் சமத்துவம் இருக்க வேண்டும். எங்கே சமத்துவம் இருக்கின்றதோ அங்கே ஐக்கியம் தளைக்கும். எங்கே சமத்துவம் இல்லையோ அங்கே ஐக்கியம் காணாமல் போய் விடும்.

உண்மை சமத்துவத்தை நோக்கியதான முயற்சிக்கு நான் எப்போதும் ஆதரவளிப்பேன். அதை இரத்தின தேரர் முன்னெடுக்கின்றார் எனின் அதற்கு அரசியல் பேதங்களுக்கு அப்பால் சென்று உதவிட நான் தயாராக உள்ளேன். ஆனால், நடந்து முடிந்த யுத்தத்திற்கும், இன்றைய நமது எல்லா துன்பங்களுக்கும், இனக்களுகிடையேயான விரிசல்களுக்கும் ஆக வேலுப்பிள்ளை பிரபாகரனே காரணம் என்ற கூற்றை இந்நாட்டு அரசியல் தலைவர்கள் கைவிட வேண்டும். அது அப்படியல்ல.

உண்மையில் இந்நாட்டில் தொன்று தொட்டு இருந்து வந்த இனவாதம்தான் வேலுப்பிள்ளை பிரபாகரனை விடுதலை புலி பிரபாகரனாக மாற்றியது. இனவாத ஆரம்பத்திற்கு அன்றைய அரசாங்களும், சிங்கள தலைவர்களும், தமிழ் தலைவர்களும் காரணமாக அமைந்தார்கள். விடுதலை புலிகள் இயக்கத்தின் பின்பாதி காலகட்ட நடவடிக்கைகள் சில இனவிரிசலுக்கு காரணமாக அமைந்தன என்பதும் உண்மைதான். ஆனால், ஒட்டுமொத்தமாக எல்லா பழிகளையும் புலிகளின் மீது போட்டு விட்டு தப்பும் முயற்சிகளை நாம் ஏற்க முடியாது. யுத்தம் நடந்தமைக்கான காரணங்களை கண்டறிந்து தீர்வு காண்பதற்கு இந்த புரிந்துணர்வு அவசியம்.