செய்திகள்

வேலையற்ற பட்டதாரிகள் யாழ்ப்பாணத்தில் போராட்டம்: வேலை தருமாறு கோரிக்கை

வடமாகாணத்தைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் யாழ்.மாவட்ட செயலக முன்றிலில் கவனயீர்ப்பு ஒன்றுகூடலை நடத்தினர். அரசியல் தலையீடற்ற வேலை வாய்ப்பை வலியுறுத்தி பல நூற்றுக்கணக்கான வேலையற்ற பட்டதாரிகள் இந்த ஒன்றுகூடலில் பங்கேற்றனர்.

இன்று புதன்கிழமை காலை இந்தப் போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளை வேலை வாய்ப்புக்களில் உள்ளீர்க்கக் கோரல் தொடர்பான மனு ஒன்றை வடக்கு மாகாண முதலமைச்சர், வடமாகாண ஆளுநர், மாவட்ட அரச அதிபர்கள் ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

முதற் கட்டமாக ஆளுநர் செயலகத்தின் உதவிச் செயலாளர் ஜே.எக்ஸ்.செல்வநாயகத்திடம் மனு கையளிக்கப்பட்டது. அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-

“வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளை வேலைவாய்ப்புக்களில் உள்ளீர்க்கக் கோரல் தொடர்பானது. வடமாகாணத்தை சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகளாகிய நாம் நாட்டில் ஏற்பட்டுள்ள உயிரூட்டமான மாற்றங்களை வரவேற்கின்றோம். இம்மாற்றங்கள் நாட்டில் அனைத்துத் துறை ரீதியாகவும் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை.

இதனடிப்படையில் ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுத்து வருகின்ற புதிய தேசிய அரசாங்கத்திற்கு எமது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம். இந்த நிலைமையில் தங்களிடம் கோருவது யாதெனில் பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறிய பட்டதாரிகளாகிய நாம் 2012ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை எந்தவொரு வேலை வாய்ப்புக்களையும் பெற்றுக்கொள்ள முடியாத இக்கட்டான நிலைமைகளிலேயே இருந்து வருகின்றோம்.

சரியான வினைத்திறனான தகைமைகளை கொண்டிருந்தும் வேலைவாய்ப்புச் சந்தர்ப்பங்களில் அரசியல் தலையீடுகளால் புறக்கணிக்கப்பட்டுள்ளோம். கடந்த காலங்களில் சில அரசியல் தலைவர்களின் சிபாரிசுகளின் அடிப்படையில் தகுதியற்றவர்கள் வேலைவாய்ப்புக்களில் உள்ளீர்க்கப்ட்டுள்ளனர். வேலை வாய்ப்புக்களில் உள்ளீர்ப்பதற்குரிய சட்டரீதியான நடைமுறைகள் நாட்டில் இருந்த போதும் கடந்த காலங்களில் வடமாகாணத்தில் இவை பின்பற்றப்படாமல் பலருக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது மிகவும் வேதனையளிக்கின்ற விடமாகும். இது மட்டுமல்லாமல் தேர்தல் காலங்களில் வேலை வாய்ப்புக்களை பெற்றுத் தருவதாக கூறி பல தடவைகள் அலைக்கழிக்கப்பட்டு நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம். தற்போதய அரசியல் சூழ்நிலை மாற்றத்துடன் எமக்கான சகல வாய்ப்புக்களும் திறப்பதற்கான சூழ்நிலைகள் தோன்றியிருக்கிறது. புதிய அரசின் பிரதமர், பத்து லட்சம் வேலைவாய்ப்புக்களை வழங்குவதாக உறுதியளித்திருந்தார்.

எனவே வடமாகாணத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் பட்டம் பெற்று வெளியேறிய 05 அணிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் உள்ளனர். இவர்களது நிலையைக் கருத்தில் கொண்டு பாகுபாடின்றி வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்க புதிய அரசு ஆவனசெய்யவேண்டும்.”

இந்த ஒன்று கூடலில் வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் ஒன்றும் நிறுவப்பட்டது.